சேரா கலையரசன் இயக்கத்தில் விக்னேஷ், ஆரா மற்றும் பலர் நடித்துள்ள படம்.
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிராமிய மணம் வீசும் ஒரு காதல் கதை. அதே சமயம் சாதிய வேறுபாடுகளைப் பற்றி கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படமும் கூட.
விக்னேஷ், ஆரா இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் சிறு வயது முதலே நட்பாகப் பழகியவர்கள். பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் போது காதலில் விழுகின்றனர். இவர்கள் காதல் விவகாரம் தெரிய வந்ததும ஆராவின் அம்மா மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விடுகிறார். நன்றாகப் படிக்கும் ஆரா எப்படியாவது பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டுமென நினைக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் முடியும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் படத்தின் மீதிக் கதை.
‘காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சிறுவன் இளைஞனாக வளர்ந்தாலும் அதே இயல்பான நடிப்பு. அறிமுகக் கதாநாயகி ஆரா பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் அனைவருமே அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். அந்த கிராமத்திற்கு நாமும் நேரில் சென்று பார்த்தது போன்ற ஒரு உணர்வை அனைவரும் கொடுத்திருக்கிறார்கள்.
உதயகுமாரின் இசை, சமீர் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு மேலும் உயிரோட்டமாய் அமைந்துள்ளது.
பள்ளி மாணவ, மாணவியின் காதல் என்பது மட்டுமே சற்று நெருடல். மற்றபடி ஒரு அழகான கிராமத்து வாழ்வியல் பதிவு இந்தப் படம். பிரபலமில்லாத நடிகர்கள் நடித்துள்ள படம் என இப்படத்தை ஒதுக்காமல் அனைவருமே பார்த்து ரசிக்கலாம்.