‘வாடிவாசல்’ பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. முதல் பாகத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எல்ரெட் குமார் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எப்போதும் முடிவடையும் என்பது தெரியாமல் இருக்கிறது.
இதனிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படம் ‘வாடிவாசல்’. இதனை தாணு தயாரிக்க சூர்யா, அமீர் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக இந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது. மாடுகளுடன் படப்பிடிப்பு எப்படி நடத்தலாம் என்பதற்கான திட்டமிடல் படப்பிடிப்பு மட்டுமே சுமார் 3 நாட்கள் நடைபெற்றது.
அதன் காட்சிகளை வைத்து சிறுவீடியோ பதிவொன்றை வெளியிட்டது படக்குழு. இவை தவிர அவ்வப்போது படத்தினைப் பற்றிய தகவல் வெளியாகி வந்தாலும், படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் இருக்கிறது.
இந்நிலையில், ‘வாடிவாசல்’ படத்திற்காக நடைபெற்று வந்த பணிகள் அனைத்தையுமே படக்குழுவினர் நிறுத்திவைத்துள்ளனர். ஏனென்றால், படப்பிடிப்பு திட்டமிட்டவுடன் தொடங்கிக் கொள்ளலாம், அதுவரை வீண் செலவுகள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர். ஏனென்றால், ‘விடுதலை 2’ படப்பிடிப்பு முடிந்து வெளியாக ஆகஸ்ட் மாதம் ஆகலாம் என்று தெரிகிறது.
’விடுதலை 2’ வெளியாகி ‘வாடிவாசல்’ தொடங்க இந்த ஆண்டு இறுதியாகும் என்று கூறுகிறார்கள். அதுவரை எந்தவொரு செலவுமே செய்ய வேண்டாம் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும், ‘கர்ணா’, ரவிக்குமார் படம், சுதா கொங்காரா படம் என வரிசையாக சூர்யாவின் படங்களின் வரிசையும் முடிவாகிவிட்டது.
இதனால் சூர்யாவின் தேதிகள், வெற்றிமாறன் – சூர்யா பேச்சுவார்த்தை உள்ளிட்டவை நல்லபடியாக முடிந்தால் மட்டுமே ‘வாடிவாசல்’ படத்திற்கு ஒளி கிடைக்கும் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாக தெரிகிறது.