விஜய் டிவியின் மிகப் பெரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி , இம்முறை இன்னும் பிரம்மாண்டமான முறையில் , வெற்றியாளர்களுக்கு பல லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி, விலைமதிப்பில்லாத ஒரு வாய்ப்பையும் தரப் போகிறது.
இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இணைகிறார். சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஏ.ஆர் ரகுமான் ‘இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு தனது இசையில், பாடும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது’ என்று அறிவித்துள்ளார். அது அனைத்து போட்டியாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
ஆயிரம் கனவுகளை, நிஜமாக்கிய ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஆகும் . நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன், ‘சூப்பர் சிங்கர் 6’ வரும் ஜனவரி 21 முதல், சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
பாட்டு, ஸ்வரம், ஸ்ருதி என பாமர மக்களும் இசை மொழி பேசத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியை பார்த்து தான். 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது உலக அளவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது.
நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும் ஆனந்த ரவிந்தாக்ஷன் என டைட்டிலை தட்டிச் சென்றவர்கள் பலர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பொறுத்த வரையில், வெற்றியாளர்கள் மட்டுமின்றி, திறமைசாலிகள் அனைவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சிக்கு நடுவர்களாக உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.