விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 பாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்று நிகழ்ச்சி கடந்த வெள்ளிக் கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் முதலிடம் பெற்று 70 லட்சம் பெறுமானமுள்ள வீடு ஒன்றைப் பரிசாக வென்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பது ஓரளவிற்குப் பாடத் தெரிந்தவர்களை ‘பிரம்மாண்டக் குரல் தேடல்’ என்று தேர்வு செய்து அவர்களுக்கு ஆனந்த் வைத்தியநாதனை வைத்து பயிற்சி கொடுத்து இறுதிப் போட்டிக்கு ஐந்து பேரைத் தேர்வு செய்து அவர்களில் ஒருவரை ‘வின்னர்’ ஆகத் தேர்வு செய்வார்கள்.
இந்த ‘சூப்பர் சிங்கர் 5’ நிகழ்ச்சியில் ‘வின்னர்’ ஆனத் தேர்வு ஆன ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஓரளவிற்கு பாடத் தெரிந்தவர் அல்ல, நன்றாகவே பாடத் தெரிந்தவர் என்ற உண்மை தற்போதுதான் வெளிவந்துள்ளது.
இன்றைய பிரபல இளம் இசையமைப்பாளர் இமான், என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோரது இசையில் ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் என்ற உண்மை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
‘ஆரோகணம், பாண்டிய நாடு, நீர்ப்பறவை, மதயானைக் கூட்டம், 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களில் பாடியிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்ஷன்.
நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்த கோடானு கோடி தமிழ் மக்களை ஏமாற்றியது கூடப் பரவாயில்லை. ஆனால், தங்களைப் போலவேதான் மற்றவர்களும் என நினைத்துக் கொண்டு இந்தப் போட்டியில் பங்கு பெற்று இறுதிச் சுற்றுக்கு வந்த ‘ஃபரீதா, சியாத், லட்சுமி, ராஜகணபதி’ ஆகியோரது மனநிலையைத் தற்போது நினைத்துப் பாருங்கள்.
ஏற்கெனவே, சில இசையமைப்பாளர்களால் பின்னணிப் பாடகராக அங்கீகரிக்கப்பட்ட ஆனந்த் அரவிந்தாக்ஷன் அவர்களுடன் போட்டியிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எந்த விதத்தில் நியாயாம்.
அதிலும், இறுதிப் போட்டிக்கு முன்பாக அவரை போட்டியிலிருந்து நீக்க வேறு செய்தார்கள். பின்னர் ‘வைல்ட் கார்டு’ மூலம் அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது எல்லாம் தனி நாடகம். ‘சூப்பர் சிங்கர் 5’ நிகழ்ச்சியே ஒரு நாடகமாக இருக்கும் போது அதில் இது ஒரு தனி நாடகம்தான்.
உடனடியாக ஆனந்த் அரவிந்தாக்ஷனை முதல் இடத்தைத் தேர்வு செய்ததிலிருந்து நீக்கி விட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்த ஃபரீதாவை முதல் இடத்திற்குத் தேர்வு செய்து அவருக்கு 70 லட்ச ரூபாய் வீட்டைத் தரவேண்டும் என்பதே இன்று சமூக வலைத்தளங்களில் இது பற்றி பதிவிடுபவர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த சித்ரா, மனோ, சீனிவாஸ், மால்குடி சுபா, உன்னி கிருஷ்ணன் மற்றும் இந்தக நிகழ்ச்சியில் அடிக்கடி நடுவர்களாக வந்து கலந்து கொண்ட மற்றவர்கள் அனைவரும் தங்கள் தொழில் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும்.
மக்களையும், ரசிகர்களையும் முட்டாள்களாக நினைத்து விடாதீர்கள்…அவர்கள் தூக்கியெறிய ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்…