நாகார்ஜுனா…இந்தப் பெயரை இன்று 40 நெருங்கியுள்ளவர்களும், 40ஐக் கடந்தவர்களும் கண்டிப்பாக மறக்க மாட்டார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில், நாகார்ஜுனா, கிரிஜா இருவரும் இணைந்து நடித்த அற்புதமான காதல் காவியமான ‘இதயத்தை திருடாதே’ படத்தை தங்களது கல்லூரிக் காலங்களிலும், பள்ளி நாட்களிலும் பார்த்து ரசித்தவர்கள் பலர்.
அப்போது கார்த்திக்குக்குப் போட்டியாக நாகார்ஜுனா வந்துவிட்டார் என்று கூட ஒரு பேச்சு எழுந்தது. இத்தனைக்கும் ‘இதயத்தை திருடாதே’ தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த டப்பிங் படம்தான்.
அடுத்து வந்த ‘உதயம்’ படமும் வெள்ளி விழா படமாக அமைந்தது. அடுத்து பல ஆண்டுகள் கழித்து ‘ரட்சகன்’ படத்தில் நடித்த நாகார்ஜுனா மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள நேரடிப் படம் ‘தோழா’.
இன்னும் இரண்டு நாட்களில் வெளிவர உள்ள இந்தப் படம் மீண்டும் நாகார்ஜுனாவின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.