ராஜமெளலியின் புதிய முடிவை மகேஷ் பாபு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
’ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜமெளலி. கே.எல்.நாராயணா தயாரிக்கும் இந்தப் படம் தான் தற்போது இந்தியாவிலிருந்து தயாராகும் அதிக பொருட்செலவிலான படம் என்ற பெயர் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவுற்று, தற்போது முதற்கட்டப் பணிகள் ஜெர்மனியில் தொடங்கியிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு 2 ஆண்டுகள் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்திற்கான மகேஷ் பாபுவின் சம்பளம் என்ன என்பது இதுவரை பேசப்படவே இல்லை.
தற்போது, சம்பளத்திற்கு பதிலாக மகேஷ் பாபுவையும் இந்தப் படத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இணைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் ராஜமெளலி.
தனது படங்களுக்கு சம்பளமாக அல்லாமல் ஒட்டுமொத்த வியாபாரத்தில் பங்கு என்றே பெற்றுக் கொள்கிறார் ராஜமெளலி. அதே பாணியை இந்தப் படத்துக்கு மகேஷ் பாபுவுக்கு பின்பற்ற திட்டமிட்டு இருக்கிறார் ராஜமெளலி.
எப்போதுமே ராஜமெளலி படங்கள் என்றாலே, அதன் பணபரிமாற்றங்கள் அனைத்தும் ராஜமெளலியின் மேற்பார்வையில் தான் நடக்கும். ஆகையால் இதனை மகேஷ் பாபு ஒப்புக் கொள்வார் என்றே தெரிகிறது.
இந்தப் படத்தில் உலகளாவிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணிபுரியவுள்ளார்கள்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.