ஆக்ஷன் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘ராங்கி’.

இப்படம் டிசம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தயாரித்து முடித்து சென்சாருக்குச் சென்ற போது அவர்கள் சில காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்று அங்கு பல ‘கட்’களுக்குப் பிறகு படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அந்த காரணத்தால்தான் பட வெளியீடு தாமதமானதாக இயக்குனர் சரவணன் தெரிவித்தார்.

அவர் படம் பற்றி மேலும் பேசுகையில்,

“தையல்நாயகி என்ற பத்திரிகையாளராக த்ரிஷா நடிக்கிறார். அவருடைய அண்ணன் மகளுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட அதைச் சரி செய்ய முயல்கிறார். அந்த பிரச்சினை அவரை சர்வதேச அளவில் இன்னும் பெரிய பிரச்சினைக்குள் இழுத்துச் செல்கிறது. அதை த்ரிஷா தீர்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தின் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் படமாக்கப்பட்டது. கதைப்படி லிபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும். ஆனால், அந்த நாட்டுப் பெயர்களைப் பயன்படுத்த மற்றும் டாலர், ரா, எப்பிஐ உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்த தணிக்கைக் குழுவினர் ஆட்சேபித்தனர். அதனால், படத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ‘கட்’ உள்ளது. திரைக்கதையில் குழப்பம் ஏற்படாத வகையில் அவற்றையெல்லாம் சரி செய்திருக்கிறோம்.

இப்படத்தின் கதையை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் எழுதியிருக்கிறார். தாங்கள் செய்வதுதான் சரி என அதைச் செய்து முடிக்க அடம் பிடிப்பவர்களைத்தான் ‘ராங்கி’ என அழைப்போம். அப்படி ஒரு கதாபாத்திரம் த்ரிஷாவுடையது.கதையைக் கேட்டதும் த்ரிஷா நடிக்க சம்மதித்தார். அவருக்கான ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் உள்ளன. பேமிலி சென்டிமென்ட் ஆக்ஷன் என படம் பரபரப்பாக நகரும்,” என்றார் இயக்குனர் சரவணன்

Read Previous

இசைக்கலைஞர்களுக்காக அந்தோணிதாசன் துவக்கிய நிறுவனம்

Read Next

தங்கர் பச்சான் இயக்கத்தில் அருவி புகழ் ”அதிதி பாலன்”

Most Popular