பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டாலும், தேர்தல் தேதி அறிவிப்பால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், ஐபிஎல் உள்ளிட்டவை முடிந்தவுடன் தான் ‘தங்கலான்’ வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனால் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். அவரே இயக்கி, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இதில் தினேஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ’அட்டக்கத்தி’ படத்திற்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் தினேஷ்.
45 நாட்களில் ஒட்டுமொத்த படத்தினை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். மேலும், சென்னையை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே படப்பிடிப்பையும் நடத்தவுள்ளார்கள். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்தப் படத்திற்குப் பிறகு ’பர்சி முண்டா’, ‘சர்பட்டா பரம்பரை 2’ ஆகிய படங்களில் எதனை தொடங்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அந்தப் படங்கள் நடிகர்களின் தேதியை வைத்தே முடிவாகும் எனத் தெரிகிறது.