ஓடிடி ரிலீஸ் ஏன் ? – ஜோதிகா விளக்கம்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

தமிழ் சினிமாவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஒரு முன்னணி நடிகையின் முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. இதற்கு முன் ஓடிடி தளங்களில் சில சிறிய படங்கள்தான் வெளியாகி உள்ளன.

‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக என்ன காரணம் என்பது குறித்து ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.

“இப்போது நிறைய பேருக்கு ஓடிடி தளங்கள் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறைய பேர் வீட்டில் அமர்ந்து படங்கள்தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி தளம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். 

திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்புக்குமான நன்மை எதுவோ அதைத்தான் கவனிக்க முடியும்.  

கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். 

ஓடிடி தளம் என்பது கதையை மையமாகக் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். தியேட்டர்களுக்கு வருபவர்களில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.

சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்திய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 

ஹீரோக்களின் படங்களோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறைய பேர் செல்ல மாட்டார்கள். வழக்கமாக என் படங்களுக்கான ரசிகர்களை விட,  ஓடிடி மூலம் அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். 

என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. 

கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்களின் படங்கள் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது 'பொன்மகள் வந்தாள்' படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்,” என்று விளக்கமளித்துள்ளார்.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் மே 29ம் தேதி வெளியாகப் போகிறது

Read Previous

பொன்மகள் வந்தாள் – டிரைலர்

Read Next

அமேசானில் வந்தது ஆட்டோகிராப்