நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஓம் நமோ வெங்கடேசாய’ படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.
வேங்கடச பெருமாளின் பக்தரான, ராமா என்பவருக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப் படம் அனைவரும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது . இன்றைய நவீனமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது .
சுமார் 108 படங்களுக்கும் மேல், இயக்கி வரும் ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான, கே.ராகவேந்திர ராவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது பக்தி மயமும், சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்ட படம். பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்கள்.
மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்ற சௌரப் ஜெயின், வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். பாகுபலிக்கு இசையமைத்த மரகதமணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.
இப்படம் பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.
பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன ?, திருமலை உருவான விதம் எப்படி ?, ஆனந்த நிலையம் என பெயர் வரக் காரணம் என்ன ?, வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன ?, பாலாஜி என்று பெயர் வரக் காரணம் என்ன ?, திருமலையில் முதலில் யாரை வணங்குவது ?, எனப் பல கேள்விகளுக்கான விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக் காட்சிகளாக அமைத்து விளக்கியுள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம் . சுவாரசியமாகவும் , பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும், திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது,” என்று பாராட்டியுள்ளார். திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறது படக் குழு .
பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது . விறுவிறுப்பான பிரம்மாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வசனம், பாடல்களை D. S. பாலகன் எழுதியுள்ளார். J. K. பாரவி கதை எழுத, கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அமைந்திருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும்.
தமிழகத் திரைகளில் இந்தப் ‘பிரம்மாண்ட நாயகன் ‘ விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் வெளியாகவுள்ளது.
ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.