ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியியில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதிதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத் தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகைகள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியதாவது,
“இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் ‘அருவி’ படம்தான். உலக அளவில் நடைபெறக் கூடிய திரைப்பட விழாக்களில் நாங்கள் தயாரித்த படங்களைப் பற்றி சிலர் கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ‘பிரியாணி’ படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9 மணிக்கு மேல் தான் ‘அருவி’ படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார்.
கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி , இசையோடு அவர் கதையை கூறினார். நாங்கள் படத்தின் கதையைப் பெரிதாக நம்புகிறோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
அருவியைப் பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும் , இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தைத் தரமான படமாக உருவாக்கியுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர். அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது. அதன் பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
அருவி கதாபாத்திரத்துக்காக 500 பெண்களை இயக்குநர் ஆடிஷன் செய்தார். நான் அவரிடம் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக ஆடிஷன் செய்கிறீர்களா ?? அல்லது 500 பெண்களை சந்திக்க வேண்டும் என்று ஆடிஷன் செய்கிறீர்களா ?? என்று கேட்டேன். அவர்களில் தேர்வான ஒருவர்தான் படத்தின் நாயகி அதிதி பாலன்.
சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்தப் படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம், ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.
படத்தின் இயக்குநர் அருண் பிரபு பேசும் போது, ‘அருவி’ மனிதத்தை பற்றிப் பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா , கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி,++ என்றார்.
‘அருவி’ படம் அடுத்த வாரம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது.