காலம் என்பது முக்கியம் – ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக அவரது ரசிகர்களை சந்தித்தார். அரசியல் குறித்த அவரது நிலைப்பாட்டினை 31 ஆம் தேதி அறிவிக்கவிருப்பதை குறித்து இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது என்று கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,

“கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு மிகவும் நெருக்கமான பலர் இருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகளும், தயானந்த சுவாமிகளும் எனது குருமார்கள். சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு அந்தப் பெயர் இமயமலையில் உள்ள சிவானந்த சுவாமிகளிடம் முக்தி பெற்ற பின்னரே வந்தது. அவர்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நன்மைகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

ஒரு முறை நானும் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களும் கோவை சென்றிருந்த போது ரசிகர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாங்கள் சென்ற போது ரசிகர்கள் அனைவரும் என் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்தனர். பின் விழா முடிந்தவுடன் சிவாஜி ஐயாவிடம் இது குறித்த என் வருத்தத்தைத் தெரிவித்தேன். அதற்கு அவர் ரஜினி இதற்கு பெயர்தான் காலம். நான் பெரிய நடிகனாக இருந்த போது எனக்கும் இது போன்ற கூட்டம் இருந்தது. இப்போது இது உனக்கான காலம் என்றார்.

எனவே, எந்தவொரு செயலுக்கும் காலம் என்பது முக்கியம். நமக்கான காலம் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் பேசினார்.

1996ம் ஆண்டு அப்படி ஒரு காலம் ரஜினிகாந்துக்கும் வந்தது. ஆனால், அப்போது அவர் அரசியலில் இறங்கவில்லை. வரும் 31ம் தேதியாவது அவர் அரசியலில் இறங்குவாரா எனப் பலரும் காத்திருக்கின்றனர்.

Read Previous

‘இரும்புத் திரை’, மிக முக்கியமான படம் – விஷால்

Read Next

2017 தமிழ் சினிமா – அசத்தல் அறிமுக கதாநாயகிகள்

Most Popular