அரசியலுக்கு வருவது உறுதி – ரஜினிகாந்த் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஐந்து நாட்களாக அவரது ரசிகர்களை சென்னையில் உள்ள அவரது  ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.

தினமும் ரசிகர்களுடன் பேசுகையில் ஒரு கருத்தை, ஆலோசனையை ரசிகர்களுக்கு அவர் வழங்கி வருகிறார்.

கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த போது ‘போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவர் கூறியிருந்தார். அதன் பின் ‘2.0, காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டதால் ரசிகர்களுடனான சந்திப்பை தள்ளி வைத்தார்.

தற்போது ரசிகர்களைச் சந்தித்து வரும் ரஜினிகாந்த்  31ம் தேதி (இன்று) அரசியல் பற்றிய அவருடைய நிலையை  அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இன்று காலை ரசிகர்களைச் சந்தித்து அவர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த் அவருடைய அரசியல் நிலையைப் பற்றி அறிவித்தார்.

“நான் எல்லாத்தையும் ஏற்கெனவே முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி, நான் அரசிலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிப்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடலை. பாராளுமன்றத் தேர்தல்ல முடிவெடுப்பேன்.

நான் அரசியல்ல வரது பேருக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வரலை. அதை நீங்க ஆயிரம் மடங்கு கொடுத்துட்டீங்க. பதவி மேல எனக்கு ஆசை இருந்தால் 1996லயே நான் அரசியல்ல வந்திருப்பேன். அது வேண்டாம்னு தள்ளி வைச்சேன். 45 வயசுலயே அதை தள்ளி வச்சேன், 68 வயசுல அந்த ஆசை வருமா. அரசியல் ரொம்ப கேட்டுப் போச்சி. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சி.

நாட்டில் அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர் கெட்டுவிட்டது. கடந்த ஒர் ஆண்டில் தமிழ் நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலை குனிய வைத்தது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுக்கவில்லையெனில் என்னை வாழவைத்த தமிழ் தெய்வங்களுக்கு ஜனநாயக முறையில் நல்லது செய்ய ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும்.

அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது. சிஸ்டம் மாற்றப் பட வேண்டும். உண்மையான, வெளிப்படையான சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம் விருப்பம். அது என் போன்ற தனி ஒருவனால் முடியாது.

மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை. தேர்தலில் ஜெயிப்பது எளிதான விஷயமல்ல, நடுக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. ஆண்டவனாகிய அவன் அருளும், மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். இது இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பழைய காலத்தில் ராஜாக்கள் அன்னிய நாட்டினரை கொள்ளை அடிப்பார்கள் ஆனால் இங்கு சொந்த நாட்டில் சொந்த மக்களையே கொள்ளை அடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும், கட்சியின் அடிப்படையிலேயே இம்மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
கட்சியில் ஆணி வேர் தொண்டர்கள் தான். அவர்கள் இல்லாமல் முதலமைச்சரே இல்லை. எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும்.

பொது நலத்திற்கு பாடுபடும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள தப்பு செய்தால் தட்டிக் கேட்கும் காவலர்கள் தான் எனக்கு வேண்டும். தகுந்த வேலைக்கு தகுதியுள்ள ஆட்களை நியமித்து வேலை சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வையிடும் சாதரண பிரஜை, மக்களின் பிரதிநிதி தான் நான்,” என ரசிகர்களின் ஆரவாரத்துடன் அரசியல் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்தார்.

Read Previous

எம்ஜிஆர் பட டீசரை வெளியிட பிரதமர் மோடி-யிடம் கோரிக்கை

Read Next

இரவிலேயே பயணிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

Most Popular