ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, மாறன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், அருள்நிதி, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’.
படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது,
“மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதைத் தொடர்ந்து எதிர்பாராத களத்தில் படத்தின் திரைக்கதை பயணிக்கும்.
தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான், சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும்.
ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
அருள்நிதி, மகிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகுந்த உழைப்பைப் போட்டு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ்.
தயாரிப்பாளர் டில்லி பாபுவின் முழு ஆதரவும், அவர் கொடுத்த சுதந்திரமும் தான் படத்தை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்தை யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், அடுத்த கட்டத்துக்கும் எடுத்துச் சென்றுள்ளது.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்,” என்கிறார்.