நடிகர் கமல்ஹாசன் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாகவே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
மாநில, மத்திய அரசுகள் பற்றியும் மற்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் அவருடைய டிவிட்டர் தளத்தில் பல கருத்துக்களைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கமல்ஹாசனைப் பற்றி பல அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்துப் பேசினார்கள், கருத்துக்களைக் கூறினார்கள்.
சென்னை, எண்ணூர் கழிமுகப் பிரச்சனையை நேரில் சென்று ஆய்வு செய்து மக்களைச் சந்தித்தார் கமல்ஹாசன்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் அவருடைய பிறந்த நாளில் அரசியல் கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால், அதன் பின் அவருடைய ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகளை முடிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அந்த வேலைகளை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் அவருடைய அரசியல் கட்சிக்கான ஆயத்தப் பணிகளை செய்து முடித்துள்ளார் என்று தெரிகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவிலும், ஜனவரி 26ம் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும், ஜனவரி 18 வரும் விகடன் இதழில் அது பற்றிய விவரங்களை எழுதியிருப்பதாகவும் பேசியிருந்தார்.
ஆனால், நேற்று நள்ளிரவில் அவர் வெளியிட்ட அறிக்கை மூலம் பிப்ரவரி மாதம் 21ம் தேதி அவருடைய கட்சியின் பெயரை அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுப் பயண விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.
“என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன்.
ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.
இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும்.
பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும், நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன்.
இது ஆட்சியைப் பிடிக்க திட்டமா ? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா ? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்,” என அந்த அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்திற்கு முன்பாகவே கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட கமல்ஹாசன் அதற்கான பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளார். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.