மூவி பஃப் மற்றும் 2 டி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – ஒரு கதை சொல்லுங்க’ என்ற குறும்பட போட்டியை இரண்டாவது ஆண்டாக நடத்த உள்ளன.
இது பற்றிய அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன், நாக் ஸ்டுடியோஸ் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த குறும்பட போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில்,
‘தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும்பட போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகை தந்த அனைத்து இளம் தலைமுறை இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதைக் களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும்பட போட்டியை தொடங்கி இருக்கிறோம்.
தற்போது உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவரும், அவர்களுக்குள் இருக்கும் கதையைக் குறும் படமாக எடுக்கலாம். தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை வைத்து ரசிகர்களை பரவசமடையச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான பாதையைத்தான் நாங்கள் திறந்திருக்கிறோம்.
இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்த குறும்படங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன் வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
சீசன் 1 இல் வெற்றி பெற்ற இளம் இயக்குநர் ஆனந்த் என்பவர் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறோம். அத்துடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனை முப்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்கள். சீசன் -1 ஐ போல் சீசன் -2 போட்டியும் வெற்றி பெறும்.
‘ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2’வில் மூன்று நிமிட கால அளவிற்குள் குறம்படத்தை அனுப்ப வேண்டும். போட்டியில் முதல் பரிசாக மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாம் பரிசாக மூன்று லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
முதலிடத்தை வென்ற போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திடம் கதை மற்றும் திரைக்கதையைக் கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ராம் பேசுகையில்,
‘மக்களையும், படைப்பாளிகளையும் பரவசப்படுத்தும் இடமாக இன்றும் திரையரங்குகள் மட்டுமே இருக்கிறது. பெரிய திரை, சுற்றிலும் இருட்டு, நவீன ஒலியமைப்பு என பல விசயங்களைச் சொல்லலாம். ஆனால் குறும்படம் என்பது வேறு வகையிலான கலை வடிவம்.
இங்கு குறும்படம் என்பது பெரிய படங்களை இயக்குவதற்கான ஒத்திகையாகவும், முன் அனுபவமாகவும்தான் இருக்கிறது. அதனால் குறும்படங்கள் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகிறது. இதைத் தவிர்த்து நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை என எங்கேயிருந்தாலும், உங்களுடைய கதையை குறும்படமாக எடுத்தால், அது இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அது பெரிய திரையில் திரையிடப்படக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற படத்தை தமிழகத்தில் மட்டும் திரையிடாமல் இந்தியா மற்றும் உலக அளவிலான அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த தருணத்தில் முன் வைக்கிறேன். ஏனெனில் கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, யாழ்ப்பாணம் என பல இடங்களிலும் திறமையான இளம் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வழி செய்ய வேண்டும்,” என்றார்.