தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டி. இமான். விரைவில் வெளிவர உள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் மூலம் அவருடைய 100வது படத்திற்கு இசையமைக்கும் பெருமையைப் பெற்றுள்ளார்.
அதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நீண்ட நேரம் நன்றி தெரிவித்துப் பேசிய டி. இமான் அவருடைய இசைப் பயணம் நான்காவது வயதில் ஆரம்பமானதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அனைவரையும் பெயர் சொல்லி குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
“ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணமாக இருந்த எனது அப்பா, அம்மா ஆகியோருக்குப் பெரிய நன்றி. இசைக் கருவிகள் வாங்கக் கூட பணம் இருக்காது. அப்போது நாங்கள் புரசைவாக்கத்தில் இருந்தோம். அங்கு எங்களுக்காகக் கடன் கொடுத்து உதவிய பலருக்கும் எங்களது நன்றி.
எனது அப்பா ஒரு பள்ளி வாத்தியார், நான் இசையமைப்பாளராக வேண்டும் என்பதற்காக எனக்காக எனது வளர்ச்சிக்காக நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார்.
திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பே எண்ணற்ற விளம்பரப் பாடல்களுக்கும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி எபிசோடுகளுக்கும் இசையமைத்துள்ளேன்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘கிருஷ்ணதாசி’ தொடரில் ‘சிகரம் பார்த்தாய் சிறகுகள் எங்கே’ என்ற பாடல்தான் என்னை அதிகம் பிரபலப்படுத்தியது. அதன் பின் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் இசையமைத்த முதல் படம் வெளிவரவேயில்லை.
விஜய் நடித்து வெளிவந்த ‘தமிழன்’ படம்தான் முதலில் வெளிவந்தது. முதல் படமாக வேறு படத்திற்கு இசையமைத்ததால் ‘தமிழன்’ படத்தின் எனக்கு அறிமுகம் என டைட்டிலில் போட்டிருக்க மாட்டார்கள். எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தவர்களுக்குத்தான் அந்த கிரெடிட் போக வேண்டும் என ‘தமிழன்’ படத் தயாரிப்பாளர் ஜிவி அவர்கள் சொன்னார்.
எனக்கு பாடியதற்காக முதன் முதலில் 10000 ரூபாய் சம்பளம் கொடுத்ததும் அவர்தான்.
நான் சென்னையில் உள்ள அடையாறு கேட் ஓட்டலில் சிறுவயதிலேயே சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பியானோ வாசிக்கச் சொல்வேன். அப்போது அங்கு வந்த இசையமைப்பாளர் தேவா என்னைத் தட்டிக் கொடுத்ததும் என்னால் மறக்க முடியாது.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்பா ஜெயகுமார் அவர்கள்தான் எனக்கு முதன் முதலில் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தவர்.
நிறைய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பது என் ஆசையில்லை. பிற்காலத்தில் ஒவ்வொருவரது வீட்டில் அவர்களிடத்தில் டி. இமான் பாடல்கள் என தனியாக ஒரு பைல் வைத்திருந்தால் அதுவே போதும். சிறந்த 100 பாடல்களாவது அதில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறேன்.
இசை ரசிகர்களை நான் இசைக் காதலர்கள் என்றுதான் சொல்வேன். அவர்களுக்கு எனது நன்றிகள். நான் இந்த அளவிற்கு வரக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்,” என டி.இமான் பெருந்தன்மையாக ஒருவர் விடாமல் நன்றி கூறி பேசினார்.
டி.இமானின் 100வது பட சாதனைக்கு நமது வாழ்த்துகள்…