நடிக்க மறுத்த நான்கு நடிகைகளுக்கு நன்றி – மிஷ்கின்

‘சவரக் கத்தி’ பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, படத்தின் நாயகன் இயக்குனர் ராம், நாயகி பூர்ணா, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தில் பூர்ணா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க மறுத்த நான்கு கதாநாயகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

“நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விடப் பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள்.

எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாகப் போடுவது பிடிக்காது. நான் இறந்த பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னைப் பற்றியும் , நான் எடுத்த படங்கள் என எல்லோரும் பேசினால் போதும்.

எனக்கு ‘சவரக் கத்தி’ படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசை ஒன்றை கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர்.

இயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய படமான ‘பேரன்பு’ சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை உலகத் திரைப்பட விழா ஒன்றில் அடுத்த வாரம் திரையிடவுள்ளனர். கண்டிப்பாக அவர் அந்தப் படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்.

முதன் முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ்ப் படத்தில் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா. இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்தப் படத்தில் பூர்ணா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான்கு நடிகைகளிடம் கேட்டோம். அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி. அவர்களில் யாராவது ஒருவர் நடித்திருந்தால் இந்தப் படம் பெயிலியர் ஆகியிருக்கும். பூர்ணா அளவிற்கு அவர்களால் நடித்திருக்க முடியாது. இந்தப் படத்தின் வெற்றிக்கு 9௦ சதவீதக் காரணமாக பூர்ணா இருப்பார், 10 சதவீதம்தான் ராம் இருப்பார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள். அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளது. திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூகக் கடமை. திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்,” என்றார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் ராம் பேசியதாவது,

“இந்த உலகில் குடிக்க, அன்பைப் பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம் தான். எல்லோரும் மிஷ்கின் அவருடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே, அதை படிப்பாரா என்று கேட்பார்கள் ? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தைப் படிப்பார்.

என்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த ‘சவரக் கத்தி’ படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச் சிறந்த கதை ‘சவரக் கத்தி’ தான். இப்படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது,” என்றார் இயக்குநர் ராம்.

Read Previous

இசைக் காதலர்களுக்கு நன்றி சொன்ன டி.இமான்

Read Next

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி