‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா சென்னைனையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின் சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிறைசூடன், “நான் தமிழைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கியதில்லை. அதனால் தான் அதிகம் சம்பாதிக்கவில்லை. பிற மொழிகள் தமிழர்களை வாழவைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும் தான் தமிழர்களை ஆளவைக்கும்,” என்றார்.
சினேகன் பேசுகையில், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைக்கனத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைக்கனம் கொள்வோம். தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்,” என்றார்.
தமிழிசை பேசும் போது, “வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை டாடி மம்மி என்று அழைக்கும் ஆங்கில கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டும். எனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் எனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள். அப்போது என் பெயரைக் கேட்ட அனைவரும் திமுககாரர்களா நீங்கள் என்று கேட்டார்கள். தேசிய கட்சி என்பதாலேயே பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல.
தமிழை நேசிப்பதால் தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே தவிர வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன்.
எங்கள் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைத்தான் ஆதரிப்போம். வேற்று மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர மாட்டோம் என்றார். நானும் ஒரு தமிழ்ப் பெண், மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள்,” என்றார்.
ஒரிசா பாலு பேசுகையில், “இந்தியாவை தவிர்த்து 48 நாட்டின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது . எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில் தான் உள்ளது. நாம்தான் மறந்து விட்டோம்,” என்றார்.
தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக ‘முகவை பிலிம்ஸ்’ அங்கயற்கண்ணன்-ஐ அனைவரும் பாராட்டினர்.
“தமிழுக்காக செலவு செய்வது என் பொற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு,” என்றார் தயாரிப்பாளர் அங்கயற்கண்ணன்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் காளிங்கன்.