தலைப்பைப் பார்ப்பவர்களுக்கு சிறிதே குழப்பம் வரலாம். 65வது தேசிய விருதுகளில் ஏஆர் ரகுமான் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். அதனால்தான், 5வது மற்றும் 6வது தேசிய விருதுகள்.
இதற்கு முன்பு 4 முறை ஏ.ஆர். ரகுமான் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு அவர் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ படத்திற்கு முதல் முறையாக தேசிய விருது பெற்றார்.
2வது முறை 1996ம் ஆண்டு ‘மின்சார கனவு’ படத்திற்காகவும், 3வது முறை 2001ம் ஆண்டு ‘லகான்’ ஹிந்திப் படத்திற்காகவும், 4வது முறை 2002ம் ஆண்டு ‘கன்னடத்தில் முத்தமிட்டால்’ படத்திற்காகவும் பெற்றுள்ளார்.
சுமார் 15 வருடங்கள் கழித்து மீண்டும் இரண்டு தேசிய விருதுகளை 2017ம் ஆண்டு அவர் இசையமைத்து வெளிவந்த படங்களுக்காகப் பெற்றுள்ளார்.
முதல் விருது ‘காற்று வெளியிடை’ படத்திற்காக சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பாளர் விருது. இரண்டாவது விருது ‘மாம்’ படத்திற்காக சிறந்த பின்ன இசையமைப்பாளருக்கான விருது.
இரண்டு படங்களுமே வியாபார ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் இரண்டு படமும் தலா இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.
‘காற்று வெளியிடை’ படத்தில் இடம் பெற்ற ‘வான் வருவான்…’ பாடலைப் பாடியதற்காக சாஷா திரிபாதி சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதையும், ‘மாம்’ படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெறுகிறார்கள்.