‘பாகுபலி 2’ படத்தின் மூலம் வட இந்தியாவிலும் திரைப்பட ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகரானார் பிரபாஸ்.
அடுத்து ‘சாஹோ’ படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்பத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வட மாநில உரிமையை டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
200 கோடி ரூபாய் செலவில் தயாராகும் ‘சாஹோ’ படத்தின் ஹிந்தி உரிமை 120 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி டி சீரிஸ் பூஷன் குமார் கூறியதாவது, “சாஹோ+வின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது. பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை விஞ்சியதாக அமைந்துள்ளது. இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்,” என்றார்.
பிரபாஸ் பேசும் போது, “ஆரம்பத்திலிருந்தே ‘சாஹோ’ ஒரு மாபெரும் காவிய சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு திரைக்காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்,” என்றார்.
இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
குல்ஷன் குமாரின் டி சீரீஸ் நிறுவனமும், பூஷன் குமாரும் இணைந்து வட இந்தியாவில் வெளியிட, UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், சுஜீத் எழுதி-இயக்கும் ‘சாஹோ’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும்.