‘தாண்டவம்’ ஆடும் பிரச்சனை…

    தமிழ்த் திரைப்படங்களை , ஆங்கிலப் படம் போல எடுத்து ஹாலிவுட்டுக்கே சவால் விட வேண்டும் என்று பலர் பேசுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் சமயங்களில் அவர்கள் ஹாலிவுட் படத்தையே தமிழ்ப்படமாக எடுத்ததையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இது வரை யாரும் அதை ஏற்றுக் கொண்டதும் இல்லை, இல்லை சொன்னதும் இல்லை.

    இந்த பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டு படங்களை அதிகாரப்பூர்வமாக உரிமை பெற்று  எடுப்பதும் இல்லை.  இவ்வளவு ஏன், இந்தியாவில் உள்ள மற்ற மொழி திரைப்படங்களிலிருந்து உரிமை பெற்று படம் எடுத்தால் கூட அவற்றைப் பற்றி வெளியில் சொல்வதும் இல்லை. ரசிகர்களாகவே புரிந்து கொண்டால் சரி.

   தற்போது திரையுலகில் நடந்து வரும் முக்கியமான ஒரு பிரச்சனை.  கதையை ‘சுட்டு’ எடுப்பது…இதற்கான  அர்த்தம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

    ஆயிரக்கணக்கான உதவி இயக்குனர்கள் ஒரு காலத்தில் நாமும் எப்படியாவது இயக்குனராக ஆகி விட மாட்டோமா என்ற கனவுடன் இந்த கனவுத் தொழிற்சாலையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தாகமும், வலியும் கூட இருந்து பார்த்தால்தான் புரியும்.

   இப்படி ஒரு கனவுடன் இருக்கும் ஒரு உதவி இயக்குனர், திரைப்படம் ஒன்றை இயக்குவதற்காக கதையுடன் சென்ற இடம் ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சென்னை பிரிவு. (மும்பையிலுள்ள இந்நிறுவனம், மற்ற மொழிகளில் தரமான படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.)  சென்னைப் பிரிவில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கம் போலவே கதை கேட்கும் படலங்கள் நடந்து முடிந்து, அந்த கதையை வாங்கி படித்துப் பார்த்து , சில மாதங்கள் கழித்து அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் சென்னைப் பிரிவு கிரியேட்டிவ் டீம்.  அந்த கதையையும் நிராகரித்து விட்டார்கள்.

    மேலும் சில மாதங்கள் கழித்து, அந்த நிறுவனத்தில் இருந்து தயாராகியுள்ள ஒரு புதிய படத்தைப் பற்றிய அறிமுகம் நடந்தது. அந்த படத்தின் டிரைலரையும், படத்தைப் பற்றிய விவரங்களையும் அறிந்த அந்த உதவி இயக்குனர் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய கதைதான் அந்த புதிய படமாக உருவெடுத்துள்ளது என்பதையும் புரிந்து கொண்டார்.

    அதன் பின் , அவர்களுக்கான சங்கத்தை அணுகியுள்ளார். தன்னுடைய கதையை அனுமதியில்லாமல் படமாக எடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும், அவருடைய ஸ்கிரிப்டையும் சங்கத்தில் சமர்ப்பித்துள்ளார்.

     ஆனால், படத்தை தயாரித்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியும்,  இயக்குனரும் கதை அவர்களுடையதுதான் என கூறியுள்ளனர்.  அவரின் இரண்டாவது படத்தின் டைட்டிலுக்கும் இந்த கூற்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

     இந்த பிரச்சனைக்குரி படமும் விரைவில் வெளி வர இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த விஷத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்பதில் சங்கம் முனைப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஒரு மிகப் பெரிய நிறுவனமும் , நான்கைந்து படங்களை இயக்கிய இயக்குனரும், ஒரு உதவி இயக்குனரின் வாழ்க்கையில் ஒரு பேரிடியை இறக்கியுள்ளனர்.

     இதில் யாருடையது சரி என்பது அவரவர் மனதிற்கே தெரியும்.

 நமது ஆசையெல்லாம் ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் அந்த உதவி இயக்குனருக்கு மிகப் பெரிய ஆறுதல் தரக் கூடிய விஷயமாக இதன் முடிவு அமைய வேண்டும் என்பதுதான்….

 தவறு நடந்ததற்கான பிரயாச்சித்தம் என்ன ? பாதிக்கப்பட்டவருக்கு என்ன பதில் ? தவறு செய்தவர்கள் மீண்டும் இதே தவறு செய்யாமல் இருக்க என்ன செய்வது ? இது போன்ற மேலும் ஒரு தவறு நிகழ்ந்து விடாமல் இருக்க, தமிழ்த் திரையுலக முக்கிய புள்ளிகள் ஒரு தீர்வை உருவாக்க வேண்டும்.

   81 ஆண்டு கால தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைவரும் சேர்ந்து ஒரு மிகப் பெரிய முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

                                                                                                                 – ஆனந்த் சகா

 

Read Previous

பாகன் – விமர்சனம்

Read Next

மனதில் இடம் பிடித்த மம்முட்டி…