கமல்ஹாசன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் விஸ்வரூபம் திரைப்படத்தை , ‘ஆரோ 3D’ தொழில்நுட்பத்தில் திரையிட இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
“ ஆரோ 3டி தொழில்நுட்பம் , திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை, மேலும் பல படிநிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை நமக்கு அளிக்கிறது. இந்த ஆரோ 3டி தொழில்நுட்பத்தை , விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
மற்ற தொழில்நுட்பங்களைப் போல் அல்லாது, ஆரோ 3டி இயங்கு தளத்தின் செயல் உருவாக்கமும், மிகக் குறைந்த நிறுவுதல் நேரமும், இதன் பெரும் சிறப்பு.
என்னுடைய நண்பர் Wilfriedன் இந்த ஆரோ 3டி தொழில்நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரையரங்குகளும், அதன் நிர்வாகிகளும், வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என உறுதியளிக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
பல தொழில் நுட்ப மாற்றங்களை தமிழ்த் திரைப்படங்களில் கொண்டு வருவதில் முன்னோடியாக இருப்பவர் கமல்ஹாசன் , இந்த தொழில்நுட்பமும் ரசிகர்களை அதிகமாகவே கவரும் என எதிர்பார்க்கலாம்.