இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘தங்க மீன்கள். ஜீவா, அஞ்சலி நடித்த ‘கற்றது தமிழ்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராமின் கை வண்ணத்தில் ‘தங்க மீன்கள்’ படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் ராம் நம்பிக்கையுடன் பேசுகிறார். ‘இது ஒரு தகப்பனுக்கும் 9 வயது மகளுக்கும் இருக்கும் ஒரு உன்னதமான கதை’. அந்த தகப்பன் வேடத்தில் நான் நடிப்பதும் ஒரு வேடிக்கைதான் என்று அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.
நான் கௌதம் சாரிடம் இந்த கதையை சொல்லி முடித்த பிறகு , அவர் என்னை ஆரத் தழுவி நெகிழ்ச்சியோடு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீங்களேதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார். நான் சற்றே தயங்கினாலும், அவருடைய அந்த முடிவை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடு சம்மதித்தேன். ரஷ் போட்டுப் பார்த்த போது எனக்கே ஆச்சரியம்தான்.
‘தங்க மீன்கள்’ எந்த ஒரு வெளிநாட்டு படத்தையோ, நாவலையோ, சிறுகதையையோ, சார்ந்தோ தழுவியோ எடுக்கப்பட்டது இல்லை, என்று பெருமிதத்துடன் கூறும் ராம், இது தான் சந்தித்த மனிதர்களின் அனுபவ தொகுப்பு’ என்றார்.
என்னுடைய மகளாக வரும் சிறுமி சாதனாவைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். 6 வயது முதல் 9 வயது வரை உள்ள ஒரு சிறுமியின் மன ஓட்டத்தை ஒட்டி படமாக்க வேண்டி இப்படத்தை மூன்று ஆண்டுகளாக படமாக்கி வருகிறேன். இந்த படம் தமிழ்ப் படங்களின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் ,” என்கிறார் ராம்.