பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ அவருடைய இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள ‘லைப் ஆஃப் பை’ திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக ஆங் லீ யை , கமல்ஹாசன் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றும் இதற்காக நடந்தது. கமல்ஹாசனுக்காக பிரத்யேகமாக ‘லைப் ஆஃப் பை’ படத்தின் 3டி காட்சிகள் காட்டப்பட்டன. அவற்றைப் பார்த்து பிரமிப்படைந்தார் கமல். கமல்ஹாசன், தன்னைப் பற்றியும், தன்னுடைய படங்களைப் பற்றியும் பல விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு ஆங் லீ ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தார்.
இது குறித்து ஆங் லீ தெரிவிக்கையில், ‘ கமல்ஹாசனின் திறமையைப் பார்த்து நான் முழுவதுமாக திகைத்துப் போனன். என்னைப் பற்றியும் என்னுடைய படங்களைப் பற்றியும் அவர் முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பார் என நினைக்கவில்லை. அவர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களைப் பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருக்கிறார். அவரால் நான் பேட்டி எடுக்கப்பட்டது குறித்து பெருமைப்படுகிறேன் , என்று கூறியுள்ளார்.
தொலைக்காட்சிக்கான பேட்டி முடிந்ததும் இயக்குனர் ஆங் லீ கமல்ஹாசன் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ‘விஸ்வரூபம்’ படத்தின் டிரைலரையும் கமல்ஹாசன் ஆங் லீ க்கு போட்டு காட்டினார்.
டிரைலரைப் பார்த்ததும், ‘ மொழி தெரியாத ஒருவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விஸ்வரூபம் உள்ளதாகவும், என்னை திகைப்பில் ஆழ்த்திய இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என்றும் ஆங் லீ, கமல்ஹாசனை பாராட்டினார்.
ஒரு ஆஸ்கர் விருது பெற்ற உலக இயக்குனர், உலக நாயகன் கமல்ஹாசனை பாராட்டுவது மிகப் பொருத்தமே.