தமிழ்த் திரையுலகில் இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றிக் கோட்டைத் தொடுவதே மிகப் பெரிய விஷயமாகி விட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதே காலம் காலமாக நடந்து வரும் ஒன்றாக இருக்கிறது.
இந்த ஆண்டின் விரல் விட்டு எண்ணக் கூடிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இணைந்திருப்பது ‘சுந்தர பாண்டியன்’ . இன்று இந்த படத்தின் 51வது நாள். அறிமுக இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ரகுநந்தன் இசையில் சசிகுமார், லட்சுமி மேனன், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 14 அன்று வெளியான ‘சுந்தர பாண்டியன்’ பல பெரிய நட்சத்திரங்களின் படங்களை விட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இதற்குக் காரணம் இந்த படத்தின் கதையும், தெளிவான திரைக்கதையும் தான்.
எஸ்.ஆர். பிரபாகரன், லட்சுமி மேனன் இருவருக்கும் அறிமுகப் படம். நல்ல பெயரை பெற்றுத் தந்தது. எஸ்.ஆர். பிரபாகரன் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.