விஸ்வரூபம் திரைப்படத்தின் டிரைலரை ஆரா 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட்டு பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.
“விஸ்வரூபம் திரைப்படம் எந்த மதத்துக்கோ அல்லது யாருக்கும் எதிரான திரைப்படமோ அல்ல. நான் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, மனிதர்களை கொண்டாடுகிறேன்.
இப்படி இருக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற கருத்து இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
விஸ்வரூபம் திரைப்படத்தை ஹாலிவுட் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஹாலிவுட் பட அதிபர் பேரி ஆஸ்பேனுக்கு என்னுடைய கதை பிடித்து விட்டது. கதை எழுதியாகிவிட்டது. அதை இனி செதுக்க மட்டுமே வேண்டும்,” என்றார்.
ஆரா 3டி என்ற புதிய தொழில்நுட்பத்துடன் ‘விஸ்வரூபம்’ படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக ஆரா 3 டி யில் தயாரிக்கப்பட்ட டிரைலர் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. வெளியூர்களில் உள்ள 30 திரையரங்குகளில் இதைப் பார்க்கலாம்.
மற்ற 3டி படங்களில் சவுன்ட் சிஸ்டம் 5.1 என்றால் ஆரா 3டியில் சவுன்ட் சிஸ்டம் 11.1 என இருக்கும். படம் பார்ப்பவர்கள் சம்பவ இடத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
விஸ்வரூபம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்க, இந்திய ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 3000 பிரின்ட்டுகள் போடப்படுகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.