பாலா ‘மிஸ்’ பண்ண இளையராஜா

     ‘எங்கே செல்லும் இந்த பாதை…’ என்ற பாடல் இசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலிக்க…அது வரை யாரோ ஒருவர் படுத்திருந்ததாக நாம் நினைத்திருக்க, அது படத்தின் நாயகன் விக்ரம் தான் என நாம் திரையில் அதிர்ந்த காட்சி…இன்று வரை ‘சேது’ படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்றாகவே இருக்கிறது.

‘சேது’ படத்தை தனது பின்னணி இசையால் மிகவும் தூக்கி நிறுத்தியவர் இளையராஜா. தொடர்ந்து பாலா இயக்கிய , ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ ஆகிய படங்களிலும் இளையராஜாவின் இசை படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்து அந்த படங்களை மிகவும் ரசிக்க வைத்தது.

‘நந்தா’, ‘அவன் இவன்’ படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜாவும் அருமையான இசையயைக் கொடுத்திருந்தார்.

அப்படியிருக்க பாலா, ‘பரதேசி’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த போது பலரின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.

நேற்று இப்படத்தின் இசை வெளியீடு முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்ற போது, பாலாவிடம் , “இளையராஜா ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கவில்லை” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,“ விக்ரம், சூர்யா, ஆர்யா, இல்ல விக்ரம் , சூர்யா இப்படி திரும்பத் திரும்ப ஒருத்தரை வச்சே படம் பண்றீங்கன்னு நீங்கதான் சொன்னீங்க, அதான் ஒரு மாற்றத்துக்கு இந்த படத்துல வழக்கமா என் படங்கள்ல பணி புரியற எல்லாரையும் மாத்திட்டன்னு” பதிலளித்தார் பாலா.

பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்ட டிரைலர் நன்றாகவே இருந்தது. ஆனால் , அந்த காட்சிகளுக்குரிய உயிரோட்டமான பின்னணி இசை இருந்ததா என அரங்கை விட்டு வெளியேறும் போது பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டு வெளியே சென்றனர்.

ஒரு இசையமைப்பாளரையோ, மற்ற டெக்னீஷியன்களையோ மாற்றுவதால் கிரியேட்டிவிட்டி மாறும் என பாலா போன்ற இயக்குனர் பேசியது ஆச்சரியமான ஒன்றுதான்.

இப்படத்தின் டிரைலரைப் பார்த்து இப்போதே இணையதளங்களில் ‘கருத்துப் பரிமாற்றம்’ வழக்கம் போல் ஆரம்பித்து விட்டது. அதில் பலரும் சொன்னது ‘பாலா , இந்த படத்துக்கு இளையராஜாவை மிஸ் பண்ணிட்டாரு’ங்கறதுதான்…

Read Previous

வருகிறது ‘வசந்த மாளிகை’

Read Next

துபாயில் ‘தில்லு முல்லு’

Most Popular