வருகிறது ‘வசந்த மாளிகை’

  சில வருடங்கள் முன் வரை புதிதாக ஒரு திரைப்படம் வருகிறதென்றால் ‘வருகிறது’ என்ற போஸ்டர் தெருக்குத் தெரு ஒட்டப்பட்டு சினிமா ரசிகர்களின் ஆவலைத் தூண்டும். இப்போதெல்லாம், இது மாதிரியான போஸ்டர்களை அதிகம் பாரக்க முடிவதில்லை…இருந்தாலும் ஒரு சில படங்கள் ‘மீண்டும்’ வருகிறது என்ற செய்தியைக் கேட்கும் போது ‘வருகிறது’ போஸ்டரைப் பார்க்கும் போது ஏற்பட்ட ஆவல் இச் செய்தியைப் படிக்கும் போது உங்களுக்கும் நிச்சயம் ஏற்படும.

‘கர்ணன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் திரையிடப்பட்டு வெற்றி பெற்ற பின் அடுத்ததாக நடிகர் திலகம் நடித்து எந்த படம் இப்படி டிஜிட்டல், சினிமாஸ்கோப் முறையில் வெளிவரப் போகிறது என்ற திரையுலக ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வருகிறது சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ நடித்த ‘காதல் காவியம்’ வசந்த மாளிகை.

1972ம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், வாணிஸ்ரீயின் காதல் நடிப்பாலும், அருமையான பாடல்களாலும் தமிழ்த் திரையுலகில் ஒரு மறக்க முடியாத காதல் காவியம் எனப் பெயரெடுத்தது.

அந்த காதல் காவியத்தை தற்போது டிஜிட்டல், சினிமாஸ்கோப், கலர் திருத்தம்  ஆகியவற்றைச் செய்து மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.    சாய் கணேஷ் பிலிம்ஸ் சார்பாக சீனிவாசன் இத் திரைப்படத்தை டிசம்பர் 7ம் தேதியன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

1972ல் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் தமிழ்நாடு, இலங்கை யில் பல சாதனைகளைப் புரிந்து 250 நாட்கள் ஓடிய திரைப்படமாக அமைந்தது.

கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ள இப்படத்தில், “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…”, “குடிமகனே…”, “கலைமகள்…”, “மயக்கம் என்ன…” ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளன.

நாகேஷ், பாலாஜி, சுகுமாரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘காதலை காதலிப்பவர்கள்’ மீண்டும் ஒரு காதல் காவியத்தை பார்க்கத் தயாராகுங்கள்…

வசந்த மாளிகை – கலர் புகைப்படங்கள்

வசந்த மாளிகை – கருப்பு வெள்ளை புகைப்படங்கள்

வசந்த மாளிகை – போஸ்டர்ஸ்

 

Read Previous

டிசம்பரில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’

Read Next

பாலா ‘மிஸ்’ பண்ண இளையராஜா