விஸ்வரூபம் திரைப்படம் வரும் 7ம் தேதியன்று வெளியாக இருக்கிறது, என்பதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாழக்கிழமை 7ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.
நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து , எனக்கு உடன் உதவி செய்தமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நன்றி.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக, இந்திய மக்களுக்கும் , என்னைத் தேடி வந்து ஆறுதல் சொன்ன தமிழ்த திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , எனக்குத் தெரியாமலே எனக்காக போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.
என் உரிமையைத் தமதென கருதி பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் ஒரு இந்தியனாக ஆழ்மனதிலிருந்து நன்றி.
எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து, காதலாகி , கண்ணீர் மல்க நிற்கின்றேன். என் தமிழக மக்கள் காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, கலங்காதீர் , யாமிருக்க பயமேன், என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பி உள்ளனர். நெஞ்சு விம்மி கண்ணீர்க் காட்சியை மறைக்க, என் மனது ‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்,” என்று கேவிக் கேவிப் பாடியது.
என் கலையையும் அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன்.
காசோலைகளையும், பணத்தையும் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும் அரசியலும் என்னை வறியவனாக்கினாலும், உண்பதற்கும், ஒதுங்குவதற்கும் அரிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது என்ற தைரியத்தில் இதை செய்கிறேன்.
நான் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும், என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.
பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு பெரு வணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர்க்காரணத்தை செயலாக்கிக் காட்டி ரௌத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம் பெறும்.
வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
வாழிய செந்தமிழ், வாழ்க நற்தமிழர், வாழிய பாரத மணித்திருநாடு”
என தமது அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.