விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, சரத்குமார், பிரபுதேவா நடித்த ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ஜெயம் ரவி நடித்த ‘தீபாவளி’, சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ போன்ற படங்களை இயக்கியவர் எழில்.
தற்போது விமல், பிந்து மாதவி நடிக்கும் ‘தேசிங்கு ராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மீண்டும் எப்போது பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கப் போகிறீர்கள் உட்பட சில கேள்விகளை நாம் அவர் முன் வைக்க அதற்கு அவர் அளித்த பதில்கள்,
“பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்க நல்ல கமர்ஷியல் கதைக் களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் விரைவில் இணைவேன். என்னைப் பொறுத்த வரை விஜய், அஜித் இருவருமே என் இரு கண்கள் மாதிரி. அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன்.
நான் இதற்கு முன் இயக்கிய படங்கள் எல்லாமே கமர்ஷியல் வெற்றிதான். என் படங்களில் உள்ள மென்மையான உணர்வுகளை வைத்தும் படம் பார்க்க வரும் ரசிகர்ளை ஈர்க்க முடியும்.
‘மனம் கொத்திப் பறவை’ படத்தை வாங்கியவர்களுக்கும் லாபம். தயாரித்தவர்களுக்கும் லாபம். நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர அந்ததஸ்தும் கிடைத்தது. அதுதானே வெற்றி.
தற்போது இயக்கி வரும் ‘தேசிங்கு ராஜா’ படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க நான் தயாரிக்கும் படம். விமலுக்கென்று இருக்கிற காமெடி டிரேட் மார்க் இந்த படத்திலும் இருக்கும்.
பிந்து மாதவி, சூரி என கமர்ஷியல் ஃபார்முலாவைக் கலந்து இமான் இசையின் மூலமும் பத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் இந்த படமும் கமர்ஷியல் வெற்றியைப் பெறும், ” என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் எழில்.