ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நாயகனாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் கடந்த வருடம் ஆரம்பமானது.
சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது, அதற்குள் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்படத்திற்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பல கோடிகள் செலவு செய்து அரண்மனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன.
வடிவேலு படப்பிடிப்புக்கு வராததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. சுமார் 9 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை வடிவேலுவிடம் இருந்து வாங்கித் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் இயக்குனர் ஷங்கர் புகார் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.
தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே, படப்பிடிப்புக்கு மீண்டும் வரவேண்டும் என்றால் தயாரிப்பாளர் தனக்கு மேலும் 2 கோடி தர வேண்டும் என வடிவேலு கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
ஷங்கர் அந்தத் தொகையைக் கொடுக்க முன்வருவாரா அல்லது வடிவேலுவால் ஏற்பட்ட நஷ்டத்தை அவர் கொடுத்தால் போதும், தொடர்ந்து படத்தை எடுக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படம்தான் வடிவேலுவுக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. மேலும் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படம்தான் அவரை நாயகனாகவும் அடையாளப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.