‘காலா’வுக்குத் தடை, கர்நாடகாவில் வெளியாகுமா ?

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இதனிடையே, ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு கன்னட சலுவாளி நிறுவனர் வாட்டாள் நாகராஜ், மற்றும் வேறு சில சிறிய கட்சிகளும் மிரட்டல் விடுத்தனர்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினிகாந்த் எடுத்துள்ளார். அதனால், படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டேன் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால் கூட ‘காலா’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால் அது தமிழக மக்களை அவமதிப்பது போல ஆகிவிடும். விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினிக்கு அது சரியாகவும் இருக்காது.

இப்படி ஒரு மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள் என சில வாரங்களுக்கு முன்பே ரஜினிகாந்திடம் கேட்ட போது அதை கர்நாடக அரசு பார்த்துக் கொள்ளும் என்று பதிலளித்திருந்தார்.

இன்று கூடிய கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, கர்நாடகாவின் நலன் கருதி ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை என அறிவித்துள்ளனர்.

‘காலா’ படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றால் குறிப்பிடத்தக்க நஷ்டம் ஏற்படும். இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் ‘காலா’ வெளியிட அந்த மாநில திரைப்பட வர்த்தக சபையே தடை விதித்துள்ளதால் அதை எதிர்த்து ரஜினிகாந்த் என்ன செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட்டை இழந்த வாட்டாள் நாகராஜ் போன்ற சிறிய கட்சிகளுக்கும், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கும் ரஜினிகாந்த் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை திரையுலகினர் மட்டுமல்லாது அரசியலில் இருப்பவர்களும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

Read Previous

வடிவேலு கேட்கும் 2 கோடி, ஷங்கர் தருவாரா ?

Read Next

சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’