கடந்த சில நாட்களாக நடிகை அஞ்சலி காணாமல் போய் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
அவரை 15 நாளுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் ஹைதராபாத், ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு ஹைதராபாத் மேற்கு மண்டல DCP சுதீர் பாபுவைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது அஞ்சலி கூறியதாவது, “ என்னை யாரும் கடத்தவில்லை. குடும்பப் பிரச்சனை காரணமா ஓய்வெடுப்பதற்காக மும்பை சென்று விட்டேன். இப்போது மீடியாவைச் சந்தித்துப் பேசும் மனநிலையில் நான் இல்லை. படப்பிடிப்பிடில் கலந்து கொள்வதற்காகவே நான் திரும்பி வந்தேன். நாளை (இன்று) முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன், ” என்று தெரிவித்தார்.
அஞ்சலியுடன் ஒரு நபரும் வந்திருந்தார், அவர் யார் என அஞ்சலியும் தெரிவிக்கவில்லை, காவல் துறையும் தெரிவிக்கவில்லை.
டிசிபி சுதீர் பாபும் அஞ்சலி கூறியதையே தெரிவித்தார். அஞ்சலி பேசியதை பதிவு செய்துள்ளதாகவும், அதை இன்று நீதி மன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் அஞ்சலியின் ‘கண்ணாமூச்சி’ ஆட்டத்திற்கு முடிவு வந்தது.