தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
“சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழம்பெருமையும், இலக்கிய வளமும் நிறைந்த நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் மக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாள் என்பதை மீண்டும் உறுதி செய்ததை எனக்குக் கிட்டிய ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதும் நான், நம் தமிழ் மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளில் உவகை நிறைந்த உள்ளத்தோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
புதிய சாதனைகளப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழகத்தைப் படைத்திடுவோம் என இப்புத்தாண்டில் உறுதி ஏற்போம்.
இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும் என வாழ்த்தி உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்,” என முதலமைச்சர் ஜெயலலிதா அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.