‘கொத்தனாராக’ வேலை பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்

director sac

 யக்குனரும், தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ். ஏ. சந்திரசேகரன் சினிமாத் துறைக்கு வருவதற்கு முன் கொத்தனாராக வேலை பார்த்தேன் என்ற தகவலை முதல் முறையாக தெரிவித்துள்ளார்.

எஸ்.சேதுபதிராஜன் வழங்க, எஸ்.எம்.எஸ் தியேட்டர்ஸ் சார்பில் பி.எல்.ஆர். இளங்கண்ணன் இயக்கும் ‘அடித்தளம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் நடந்தது.

பாடல்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.-ஏ.சந்திரசேகர் வெளியிட கட்டிட தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது.

இந்த விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது,

“எல்லாவற்றுக்கும் ஒரு பேஸ்மென்ட் முக்கியம். அதாவது அடித்தளம். அது இல்லேன்னா எந்த கட்டிடமும் நிற்காது. இந்த படத்தின் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றியிருக்கிறார். அவருக்கான அடித்தளம்தான் ஏ.ஆர்.ரஹ்மான். அதே மாதிரி இளங்கண்ணன் டைரக்டர் ஷங்கரிடம் பணியாற்றியவர். இவருடைய அடித்தளம்தான் ஷங்கர்.

இளங்கண்ணன் நல்ல டைரக்டர். இது அவர் இயக்குகிற மூன்றாவது படம். உண்மையில் அவரது மூன்றாவது படத்தில் விஜய்தான் நடித்திருக்க வேண்டும். இப்படத்தை இயக்குவதற்கு முன் விஜய்க்காக என்னிடம் ஒரு கதையை சொன்னார். மிக அருமையான கதை அது. நிஜ சம்பவத்தை பின்னணியாக கொண்ட அந்த கதை கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் கலந்தது.

நானும் விஜய்யிடம் அவரை அனுப்பி வைத்தேன். அவர் அந்த கதையை கேட்டுவிட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்று பாராட்டினார். ஆனால், நான் பெரிய டைரக்டர்களின் படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த கதையில் இன்னும் சில காலம் கழித்து நடிக்கிறேன் என்றார். நிச்சயம் இளங்கண்ணன் இயக்குகிற படத்தில் விஜய் நடிப்பார். அதில் சந்தேகமில்லை.

எல்லா காலத்திலும் வென்று நிற்க கூடியவை மெலடி பாடல்கள்தான். அந்த வகையில் இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை உருவாக்கியிருக்கிறார் தாஜ்நூர். நான் இரவில் தனியாக அமர்ந்து மெலடி பாடல்களைதான் கேட்பேன். நானும் தனிமையும் அந்த மெலடி பாடல்களும் மட்டும்தான் அங்கேயிருப்போம்.

கேட்கும்போதே மனதுக்கு இதமாக இருக்கும். நானெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். இளையராஜா அந்த காலத்தில் போட்ட மெலடி பாடல்கள் மாதிரி, இந்த காலத்தில் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தாஜ்நூர். அவருக்கு என் பாராட்டுகள்.

இந்த கதை கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை. நான் சிறு வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தபோது முதலில் ஒரு ஓட்டலில்தான் வேலைக்கு சேர்ந்தேன். மூன்றாவது நாளே அங்கிருந்து என்னை விரட்டிவிட்டார்கள். அதற்கப்புறம் கட்டிட வேலை நடக்கும் ஒரு இடத்தில் மேஸ்திரியாக சேர்ந்தேன். அப்படியே செங்கல்லை வைத்து நானே சுவர் எழுப்பவும் கற்றுக் கொண்டேன்.

நானும் ஒரு காலத்தில் கொத்தனராக வேலை பார்த்திருக்கிறேன் என்பதை இப்போதுதான் முதல் முறையாக சொல்கிறேன்,” என்றார்.

விழாவில் கலந்து கொண்டு படத்தின் குறுந்தகட்டை பெற்றுக் கொண்ட கட்டிட தொழிலாளர்களுக்கு எஸ்.சேதுபதிராஜன் உடைகள் மற்றும் உதவித்தொகையை வழங்கினார்.

விழாவில் படத்தின் கதாநாயகன் அங்காடித்தெரு மகேஷ், இசையமைப்பாளர் தாஜ்நு£ர், கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இயக்குனர் பி.எல்.ஆர்.இளங்கண்ணன் நன்றி கூறினார்.

 

Read Previous

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம் ஏமாற வேண்டாம் – சென்னை போலீஸ் அறிவிப்பு

Read Next

மனதில் மாயம் செய்தாய்…

Most Popular