தமிழ் சினிமாவில் ‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திடீரென புகழ் பெற்றவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.
அவரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என சென்னை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“பவர் ஸ்டார் சீனிவாசன், மதுரை சிம்மகல்லை சேர்ந்தவர். இவர் மதுரை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்துள்ளார். பின்னர் சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் அக்குபஞ்சர் பட்டம் பெற்று, சென்னையில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.
இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்துள்ளார். பின்னர், அவரைவிட்டு பிரிந்து 2–வது மனைவி ஜூலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவர் நடிகராக வேண்டும் என்ற ஆசையில், பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்றுத்தரும் நிறுவனத்தை தொடங்கி, பலரை ஏமாற்றி உள்ளார்.
பெரும் தொகை கடன் வாங்கிக் கொடுத்தால், அதற்கு 20 சதவீதம் கமிஷன் தரவேண்டும் என்று கூறி சுமார் ரூ.8 கோடி வரை ஏமாற்றியுள்ளார். இந்த தொழிலில் சீனிவாசனுக்கு பல புரோக்கர்கள் உள்ளனர். இவர்கள் பல தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு பல கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சீனிவாசனிடம் அழைத்து வந்து விட்டுள்ளனர்.
அந்த தொழிலதிபர்களிடம் பல பொய்யான வாக்குறுதிகளை கூறி, கமிஷன் பணத்தை பெற்று, சீனிவாசன் சொகுசாக வாழ்ந்துள்ளார். பணத்தை கொடுத்தவர்களுக்கு, கடன் வாங்கியும் கொடுக்கவில்லை. இந்த மோசடி பணத்தை கொண்டு, “லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை” ஆகிய படங்களை எடுத்துள்ளார்.
மேலும், அண்ணாநகர், சாலிகிராமம் ஆகிய இடங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளதாக தெரிகிறது. சீனிவாசன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அந்த சொத்துக்கள் எங்கெல்லாம் உள்ளது என்று விசாரணை நடைபெறுகிறது. மேலும், பவர் ஸ்டார் சீனிவாசனின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பவர் ஸ்டார் சீனிவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அதேபோல சண்டீகாரை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகதிச்சிங் என்பவருக்கு ரூ.200 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கமிஷன் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ரூ.200 கோடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து ஜெயகதிச்சிங் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த பிரகாஷ் ஜெ.ரத்தோர் என்பருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம் ரூ.5 கோடி வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜெ.ரத்தோர், ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை சுமார் ரூ.7 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.