சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 25 புதிய தாலுகா அலுவலகங்கள் திறக்கப்படும் என்று, நேற்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது,
தமிழகத்தில் உள்ள வருவாய் வட்டங்களில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வட்டங்களை (தாலுகா அலுவலகங்களை) பிரிக்க பரிந்துரை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு, 4 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 62 வட்டங்களை கண்டறிந்து அவற்றில் 51 வட்டங்களை முதலில் பிரிக்க பரிந்துரை செய்துள்ளது. அதில் முதற்கட்டமாக மாநகரப் பகுதியில் உள்ள வட்டங்களை பிரிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்படி, இந்த நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டை–தண்டையார்பேட்டை வட்டத்தினை பிரித்து புரசைவாக்கத்தில் ஒரு புதிய வட்டமும், புரசைவாக்கம்–பெரம்பூர் வட்டத்தினை பிரித்து அயனாவரத்தில் ஒரு புதிய வட்டமும், எழும்பூர்–நுங்கம்பாக்கம் வட்டத்தினை பிரித்து அமைந்தகரையில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.
மைலாப்பூர்–திருவல்லிக்கேணி வட்டத்தினை பிரித்து வேளச்சேரியில் ஒரு புதிய வட்டமும், மாம்பலம்–கிண்டி வட்டத்தினை பிரித்து கிண்டியில் ஒரு புதிய வட்டமும்; திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வட்டத்தினை பிரித்து திருவொற்றியூரில் ஒரு புதிய வட்டமும், அம்பத்தூர் வட்டத்தினை பிரித்து மதுரவாயலில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டத்தினை பிரித்து திருப்பூர் (தெற்கு) என்ற ஒரு புதிய வட்டமும், அவினாசி வட்டத்தை பிரித்து ஊத்துக்குளியில் ஒரு புதிய வட்டமும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வட்டத்தினை பிரித்து திருச்சிராப்பள்ளி (கிழக்கு) என்ற ஒரு புதிய வட்டமும், மணப்பாறை வட்டத்தை பிரித்து மருங்காபுரியில் ஒரு புதிய வட்டமும், மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டத்தினை பிரித்து திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை (மேற்கு) ஆகிய இரு புதிய வட்டங்களும், மதுரை (வடக்கு) வட்டத்தினை பிரித்து மதுரை (கிழக்கு) என்ற புதிய வட்டமும் தொடங்கப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் (தெற்கு) வட்டத்தினை பிரித்து பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய இரு புதிய வட்டங்களும்; சேலம் மாவட்டம், சேலம் வட்டத்தினை பிரித்து சேலம் (மேற்கு) மற்றும் சேலம் (தெற்கு) ஆகிய இரு புதிய வட்டங்களும், வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தினை பிரித்து அணைக்கட்டில் ஒரு புதிய வட்டமும், திருப்பத்தூர் வட்டத்தை பிரித்து நாட்றாம்பள்ளியில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.
கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தை பிரித்து மண் மங்கலத்தில் ஒரு புதிய வட்டமும், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தை பிரித்து, விக்ரவாண்டியில் ஒரு புதிய வட்டமும், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்தை பிரித்து, வேப்பூரில் ஒரு புதிய வட்டமும், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தை பிரித்து பூதலூரில் ஒரு புதிய வட்டமும், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டத்தை பிரித்து, திண்டுக்கல் (மேற்கு) என்ற புதிய வட்டமும் என மொத்தம் 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும்.
கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட 9 புதிய வருவாய் வட்டங்கள் மற்றும் தற்போது உருவாக்கப்பட உள்ள 25 புதிய வருவாய் வட்டங்கள் ஆகியவற்றை சேர்த்து கடந்த இரண்டாண்டு காலத்தில் 34 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.