லிங்குசாமி இயக்கப் போகும் புதிய படத்தில் அடுத்த மாதம் முதல் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக இதற்கு முன்னர் வெளிவந்த தகவல்கள் அனைத்திலும் உண்மையில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையில் சூர்யாவுக்கு அவ்வளவாக திருப்தி இல்லையென்றும், கதையை இன்னும் மெருகேற்ற வேண்டுமென கௌதமை சூர்யா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதற்கு இன்னும் சில மாதங்களாவது ஆகுமென்றும், அதனால் சூர்யா , லிங்குசாமி இயக்கத்தில் தயாராகப் போகும் புதிய படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கப்போகிறார் என்று தெரிகிறது.
நாளை சூர்யா நடித்துள்ள ‘சிங்கம் 2’ வெளியானதும் படத்தின் பிரமோஷனுக்காக சூர்யா சில நாட்களை ஒதுக்கியுள்ளதாகவும், அதன் பின் சில நாட்கள் ஓய்விற்குப் பின் லிங்குசாமி படத்திற்காக புத்துணர்ச்சியுடன் நடிக்கப் போகிறார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது வரை ‘துருவ நட்சத்திரம்’ தூர வைக்கப்படும் நட்சத்திரமாகலாம்.