ஜுன் 14ல் அசத்தலாக வரும் ‘கோலி சோடா 2’

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோலி சோடா 2.

சமுத்திரக்கனி, பரத் சீனி, வினோத், இசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.

இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசியதாவது,

“கோலி சோடா மாதிரி இந்தப் படம் இல்லைனு மக்கள் சொல்லிடக் கூடாதுனு நினைச்சிதான் எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்த பட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம்.

நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் இசையமைப்பாளர் அச்சு பொண்டாட்டி பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக் காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாகப் பேசப்படுவார்.

சமுத்திரக்கனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

விளம்பரம் செய்யும் செலவை விட்டு விட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்குத் தேவையான விஷயங்களை கொடுப்போம் என முடிவு செய்தோம்.

சென்னையில் சூர்யா அதனை தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகிறது. மதுரை காந்திமதி அம்மா, கோவையில் ராஜா சேது முரளி ஆகியோரை இந்த விழாவுக்கு அழைத்து சிறப்பித்திருக்கிறோம்,” என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.

யார் இந்த ராஜா சேது முரளி, காந்தி மதி அம்மா…அவர்களே சொல்கிறார்கள்…

ராஜா சேது முரளி – நாங்கள் கோவையில் வீணாகும் உணவை வாங்கி, இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறோம். தினமும் இந்த சாப்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நோட் புக் கொடுக்கிறோம். ஏழ்மையில் படிக்கும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை செய்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் உதவிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல வண்டியை வாங்கி கொடுத்திருக்கிறோம்.

காந்திமதி அம்மா – வடலூரில் ஒரு சில அன்பர்களுக்குத் தேவையான உதவியை செய்கிறோம், நீங்கள் உணவு அளிப்பதை நிறுத்தக் கூடாது என்று ஊக்குவித்தனர். அதைப் பார்த்த நிறைய பேர் உதவி செய்கிறார்கள். வள்ளலார் ஆசியோடு இதை செய்து வருகிறோம்.

‘கோலி சோடா 2’ படம் வரும் வெள்ளிக்கிழமை ஜுன் 14ம் தேதியன்று வெளியாகிறது.

Read Previous

மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கும்கி 2’

Read Next

விஸ்வரூபம் 2 – டிரைலர்

Most Popular