தெலுங்கில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நடிகை சமந்தா, “நல்ல கதைக்காக சம்பளத்தை குறைத்துக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.
ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சமந்தா மேலும் கூறியதாவது,
“கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளி வரும் நிலை உள்ளது.
அடுத்த ஆண்டு தெலுங்குத் திரையுலகில் இருந்து கொஞ்சம் ‘பிரேக்’ எடுத்துக் கொண்டு சில தமிழ்ப் படங்களில் நடிக்கப் போகிறேன்.
அது மட்டுமில்லை, மலையாளப்படங்களில் நடிப்பதற்காகவும் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கு நல்ல நல்ல படங்கள் உருவாகி வருகின்றன. 2 அல்லது 3 கோடி ரூபாய்க்குள் படத்தை முடித்து 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள்,” என்றார்.
இவ்வளவு குறைந்த முதலீட்டில் தயாராகும் படங்களில் சம்பளம் அதிகம் இருக்காதே என்ற கேள்விக்கு,
“நல்ல கதை என்றால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன். அதற்குப் பதிலா படத்தின் மூலம் வசூலாகும் லாபத்தில் பங்கு வாங்கிக் கொள்வேன்,” என்றார்.
தமிழில் சூர்யா, விஜய் ஆகிய முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
தெலுங்கில் முதலிடத்தில் இருப்பவர் அடுத்த ஆண்டு தமிழிலும் முதலிடத்தில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை…