தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘பாண்டிய நாடு’.
விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா மற்றும் பலர் நடித்த இந்த படம் நல்ல படம் என்று பாராட்டப்பட்டு அனைவரது வரவேற்பையும் பெற்று வருகிறது.
இப்போது இப்படத்தின் கதை தன்னுடைய கதை என்று சுசீந்திரனிடம் பணியாற்றி ஒரு உதவி இயக்குனர் உரிமை கொண்டாடியிருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் புவனராஜன்.
மணல்குவாரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை, நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயக்குனர் சுசீந்திரனிடம் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து கதை விவாதத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், திடீரென அவரை அலுவலகத்திற்குள் வரவிடாமல் தடுத்து விட்ட சுசீந்திரன், படம் முடிந்து வெளியான பின், அவருடைய வங்கிக் கணக்கில் பணம் போட்டிருக்கிறார்.
‘பாண்டிய நாடு’ படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புவனராஜன், இப்போது இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
அது மட்டுமல்ல, ‘பாண்டிய நாடு’ படத்தின் டைட்டிலும் இன்னொரு உதவி இயக்குனரான நாகராஜ் என்பவருடையது என்கிறார் புவனராஜன்.
ஆக, கதையை மட்டுமல்ல, தலைப்பையும் பறிகொடுத்துவிட்டோம் என்று கண்ணீரோடு இதை சொல்கிறார் புவனராஜன்.
ஆனால், சுசீந்திரனோ, படத்தின் கிளைமாக்ஸ் மட்டும்தான் புவனராஜன் விவாதத்தின் போது சொன்னது என்கிறார்.
தமிழ்த் திரையுலகில் கொஞ்ச நாள் காணாமல் போயிருந்த ‘கதைத் திருட்டு விவகாரம்’ மீண்டும் வெடித்துள்ளது.
‘கன்னம்’ வைத்து திருடினால் மட்டும்தான் திருட்டா…..?