இளையராஜாவுடன் மீண்டும் இணைவேனா ? – வைரமுத்து விளக்கம்

ilaiyaraja and vairamuthu“இளையராஜா – வைரமுத்து – பாரதிராஜா” என்ற இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் 80களில் ஏற்படுத்திய மாயங்கள் இன்று வரை இசை ரசிகர்களை கட்டிப் போட்டு ரசிக்க வைக்கின்றன.

இன்றைய தலைமுறை ரசிகன் கூட அந்த இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டுதானிருக்கிறான்.

அபரிமிதமான வெற்றி அந்த கூட்டணியை அப்படியே பிரித்துப் போட்டுவிட்டது. மீண்டும் அந்த கூட்டணி சேராதா என்று இருபது வருடங்களாக பலர் முயற்சித்தும் நடக்காமலே உள்ளது. சமீபத்தில் கூட “அன்னக்கொடி” இசை வெளியீட்டில் அதைப் பற்றி பாரதிராஜா பேசினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் – 4 நிகழ்ச்சியில் நேற்று முதல் நாளை வரை வைரமுத்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

நிகழ்ச்சியின் இடையில், மீண்டும் இளையராஜாவுடன் பணியாற்றுவீர்களா என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு வைரமுத்து அளித்த பதில்,

“இளையராஜாவுக்கு இளையராஜா பிரச்சனை, வைரமுத்துவுக்கு வைரமுத்து பிரச்சனை.

காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு.

இப்போதும் கூட, அவருடைய இசையை நேசிக்கிறேன். பழைய பாடல்கள் கேட்கிறபோதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்துப் பேசலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஆனால், சில சின்னச் சின்னத் தடைகள், பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்த சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிற பொழுது அது சாத்தியமாகலாம்.

ஒன்று, அந்த சுவர்கள் இடியலாம், அல்லது சிலர் இடிக்கலாம். அதன் பிறகு, உறவுகள் எப்படி சாத்தியமாகிறது என்று பார்ப்போம். என்னோடு, சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அவரில்லை. அவரோடு சேரந்துதான் பணியாற்றியாக வேண்டும் என்ற சூழ்நிலையில் நானில்லை.

ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே, அவரும் காத்திருந்தால் சாத்தியமாகலாம்.

வேண்டாமென்று நான் நினைக்கவில்லை. காலம் எப்படி கட்டளையிடுகிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் சில சேர்மானங்கள்தான் வெற்றி பெறுகின்றன.

காலம்தோறும் ஒரு கூட்டணி ஒரு வெற்றியை பூரணமாகப்  பெற்று விட்டு இசைக்குத் தொண்டாற்றிவிட்டு விடைபெறுகிறது. காலம் அப்படி விடை தந்து அனுப்பிவிட்டதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

இப்போது நாங்கள் மீண்டும் இணைந்தால், பழைய இளமை, பழைய கூட்டணி, பழைய இயக்குனர்கள், பழைய கதை, பழைய தளம், எல்லாவற்றையும் விட எங்கள் பழைய ரசிகர்கள் இருக்கிறார்களா என்று எனக்குத் தோன்றவில்லை

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ஊடகப் பெருக்கத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழர்கள், ரசிகர்கள் மாறி மாறிப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.

எனவே, நாங்கள் இனிமேல் இணைந்து பணியாற்றினால், 80களில் நாங்கள் கொடுத்த பாடல்களைப் போல, நாங்கள் எழுதிக் கொடுத்து இசையமைத்தால், அதை பழைய பாடல் என்று சொல்வார்கள் தமிழர்கள்.

அதை விட்டு விட்டு, நவீன பாணியில் அவர் இசையமைத்து, நவீன மொழியில், நான் பாட்டெழுதி, நவீனமான முறையில் படமாக்கப்பட்டால், எங்கே போயிற்று இவர்களின் பழைய ஜீவன் என்று கேட்பார்கள்.

இந்த இரண்டு பழிகளுக்கு மத்தியில், நாங்கள் தனித்திருப்பதே வெற்றி என்று நான் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,” என்று வைரமுத்து கூறினார்.

எப்படியாவது,  மீண்டும் அந்த வசந்தகாலத்தை, பொற்காலத்தை கொண்டு வாருங்கள் நண்பர்களே…

Read Previous

டிசம்பர் -13ல் ‘இவன் வேற மாதிரி’ ரிலீஸ்…

Read Next

இன்றைய ரிலீஸ்…

Most Popular