தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் டி. இமான்.
தொடர்ச்சியாக பல ஹிட் பாடல்களையும், படங்களையும் கொடுத்து வருகிறார்.
இவர் இசையமைத்து எழில் இயக்கி சிவகார்த்திகேயன், ஆத்மியா நடித்து வெளிவந்த ‘மனம் கொத்திப் பறவை’ படம் கன்னடத்தில் ‘அஞ்சாதகாடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. ஆடியோ சிடி கவரைப் பார்த்து தமிழுக்கு இசையமைத்த டி. இமான் அதிர்ச்சியடைந்துள்ளார். கன்னடப் படத்தில் இசை – டி. இமான் என பெயர் போடப்பட்டிருந்தது.
அவருடைய அனுமதி இல்லாமலே அவருடைய பாடல்களை கன்னட படத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக யாருமே அவருக்கு தெரியப்படுத்தவும் இல்லையாம்.
இது பற்றி டி. இமான் கூறுகையில்,
“மனம் கொத்திப் பறவை’யில் கன்னட ரீமேக்கைப் பார்த்து அதிர்ச்சியாக உள்ளது. பாடல்களின் டியூன்களையும், வாய்ஸ் மிக்சையும் அப்படியே பயன்படுத்தி, என்னுடைய பெயரையும் சிடி கவரில், என் அனுமதி இல்லாமலே போட்டிருக்கிறார்கள்.
தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் அடுத்த மொழிகளுக்கு விற்க முழு உரிமை உள்ளது. ஆனால், அப்படி ரீமேக் செய்யப்படும் போது, ஒரிஜனல் இசையமைப்பாளரிடம் தகவல் தெரிவிப்பது வழக்கம்.
அது ‘மனம் கொத்திப் பறவை’ படத்திற்கு நடக்கவில்லை. கன்னட மொழி பேசும் மக்களுக்கு ஒரு தகவல், ‘அஞ்சாதகாடு’ என்னுடைய கன்னட அறிமுகம் அல்ல,” என்கிறார் இமான்.
இது சம்பந்தமாக இயக்குனர் எழில் அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தப்பட்டார், மேலும் அவருக்குத் தெரியாமலே இப்படி நடந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
2012ல் வெளிவந்த ‘மனம் கொத்திப் பறவை’ தமிழில் வெற்றிப் படமாக அமைந்ததால் ‘ரீமேக் ரைட்ஸ்’ சிலரது கை மாறி நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
நம்ம கிட்டயிருந்து எல்லாத்தையும் எடுத்துக்கிறாங்க…ஆனால், தண்ணியதான் ஒழுங்கா தர மாட்டறாங்க….ம்ம்ம்…