விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, இதுவரை ஒளிபரப்பாகி வந்த டிவி நிகழ்ச்சிகளிலேயே ஒரு பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திய நிகழ்ச்சியாக அமைந்தது.
சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ‘பிக் பாஸ் 2’ கடந்த மாதம் 17ம் தேதி ஆரம்பமானது.
கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் காரணமாக விஜய் டிவியின் ஜிஆர்பி ரேட்டிங் 350லிருந்து 600 ஆக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்தனர். இந்தியா முழுவதும் 1.5 கோடி பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
உலகம் முழுவதும் உள்ள பல தமிழர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி பேசினர், விவாதித்தனர், தொடர்ந்தனர்.
இப்போது ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ‘பார்க்’ ரேட்டிங் அடிப்படையில் முதல் வார நிகழ்ச்சியானது 12.8 டிவிஆர் ரேட்டிங்கை சென்னையிலும், நகர்ப்புறங்களில் 9.7 டிவிஆர் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.
மேலும், சென்னையில் விஜய் டிவி 1000 ஜிஆர்பி ரேட்டிங்கை கடந்துள்ளது. ‘பிக் பாஸ் 2’ சீசன் ஆரம்பமான முதல் வாரத்தில் விஜய் டிவியின் ஜிஆர்பி 1014 ஆக உயர்ந்தது.
மொத்தமாக 588 ஜிஆர்பியிலிருந்து 780 ஜிஆர்பியாக உயர்ந்தது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த இரண்டாவது சீசனும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
“விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் இணைந்துள்ளது உற்சாகமாக உள்ளது. என்னுயைட திரையுலக வாழ்க்கையைத் தவிர்த்து, இந்த மாதிரியான பெரிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பது, ஒவ்வொரு தமிழ் டிவி ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும்படியாக இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து அளவுக்கதிகமான அன்பு கிடைக்கிறது.
ரசிகர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களுக்கும் இடையில் மீடியேட்டர் ஆக ‘மக்களின் பிரதிநிதி’ ஆக இருக்கிறேன்,” என்கிறார் கமல்ஹாசன்.
‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி பற்றி விஜய்டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில்,
“கடந்த சில மாதங்களாக நல்ல உயரத்தைத் தொட்டுள்ளோம். கருத்தாக்கத்திலும், ஜிஆர்பியிலும் விஜய் டிவி அற்புதமாக வளர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நல்ல உயரத்தை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்கிறார்.