தெலுங்கு ஹீரோ உதய் கிரண் தற்கொலை…

uday kiran movie launch_00008தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய இளம் ஹீரோ உதய்கிரண் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

‘சித்ரம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் 2000மாவது ஆண்டில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ‘நுவ்வு நேனு, மனசன்த  நுவ்வே’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதுவரை 21 படங்களில் நடித்த உதய்கிரணுக்கு சமீப காலமாக திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து 6 தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தார். கடைசியாக அவர் நடித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ படமும் தோல்விப் படமாக அமைந்தது.

2006ம் ஆண்டில், பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் தமிழிலும் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சத்யராஜுடன் ‘வம்புச் சண்டை’ படத்திலும், கலைஞர் வசனம் எழுதிய ‘பெண்சிங்கம்’ படத்திலும் நடித்தார்.

உதய் கிரண் நாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாரிக்க ஆரம்பித்த படத்திற்கான பூஜை கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற போது, இயக்குனர் பாலசந்தர் வந்திருந்து வாழ்த்தினார்.(புகைப்படங்கள் – இங்கே)

நேற்று இரவு கடைசியாக அவரது நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பின் அவரது நண்பர்கள் அவரைத் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. அதன் பின் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த போது, அவர் தூக்கு மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அதன் பின் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். விஷயம் கேள்விப்பட்டதும் தெலுங்கு நடிகர்களான ஸ்ரீகாந்த், ஆர்யன் ராஜேஷ், தருண் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்பதை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

33 வயதான உதய் கிரண் அவரது தோழியான விஷிதாவை  (2012 அக்டோபர் 24) திருமணம் செய்து கொண்டார். உதய்கிரணுக்கும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகளுக்கும் சில வருடங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து, அதன் பின் அந்த திருமணம் ரத்தானது.

எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் உதய்கிரணின் மறைவு ஆந்திரத் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Read Previous

நம்ம கிராமம் – விமர்சனம்

Read Next

ஜீவா உளறல் – விஜய் ரசிகர்கள் கடும் கோபம்…