நம்ம கிராமம் – விமர்சனம்

namma gramam_00015 தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும், தரமான படங்கள் அவ்வப்போதுதான்  வருகின்றன. வணிக ரீதியிலான படங்களையே நாம் பார்த்துப் பழகி விட்டதுதான் தொடர்ந்து இம்மாதிரியான படங்கள் வராமல் போவதற்குக் காரணம். ஆனாலும், சினிமா மீது தீராத காதலைக் கொண்டிருப்பவர்கள் இம்மாதிரியான படங்களை எடுக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதிலும், கலாச்சாரப் பதிவு என்ற ஒன்று இருக்கும் போது, அது காலத்திற்குமான ஒரு பதிவாகவும் அமைகிறது. அப்படிப்பட்ட ஒரு அருமையான பதிவுதான் இந்த ‘நம்ம கிராமம். மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பாலக்காடு அருகில் ஒரு சிறு கிராமத்தில் 1938ம் ஆண்டு நடந்ததாக படத்தின் கதை ஆரம்பமாகிறது. ஆங்கிலேயருக்கு  ஆதரவாக செயல்படும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவரான மோகன் சர்மா, மனைவி, ஒரே மகன், அம்மா, தங்கை, உடல் நலம் குன்றிய மைத்துனர் என வாழ்ந்து வருகிறார். அந்நாளைய வழக்கப்படி தங்கை ரேணுகாவின் மகளுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணம் முடிந்த அன்றே அந்த சிறுமியின் கணவன் இறந்து போகிறான். அதன் பின் ஓடியாடித் திரிய வேண்டிய அந்த சிறுமி விதவைக் கோலம் பூண்டு ‘ரெண்டாங்கட்டில்’ வாழ நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார். இசை மீது தீராத ஆர்வம் கொண்ட அவளுக்கு வாழ்க்கை ஒரு அறைக்குள்ளேயே முடங்கிப் போகிறது. மோகன் சர்மாவின் மகன் அப்பாவின் பேச்சைக் கேட்காமல், சுதந்திரப் போக்கில் வளரும் ஒருவன். வளர்ந்து இளைஞன் ஆனதும் , சிறு வயதிலிருந்து கூடவே வளர்ந்த அத்தைப் பெண் வீட்டில் விதவையாக இருப்பது அவனை யோசிக்க வைக்கிறது. அதன் பின் அவன் எடுக்கும் புரட்சிகரமான முடிவு  என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். கண்முன் அந்நாளைய வாழ்க்கை முறையை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மோகன் சர்மா. கதாபாத்திரங்களை உருவாக்கிய விதத்திலும், அதற்கான சரியான நட்சத்திரத் தேர்வும், அவருடைய வெற்றில் பாதியைக் கொடுத்து விட்டது. மீதி பாதி வெற்றியை ஒவ்வொரு நட்சத்திரங்களுமே அவருடைய நடிப்பில் கொடுத்திருக்கிறார்கள். 2011ம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைகக்கான விருதை இந்த படத்திற்காகப் பெற்ற சீனியர் நடிகையான சுகுமாரி முதல், சிறுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் வரை அனைவருமே அவர்களுடைய இயல்லபான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஊர் என்ன பேசும் என்பதற்காகவும் , சாதி வழக்கப்படியும் மட்டுமே நடந்து கொள்ளும் அந்த காலத்து மனிதராக மோகன் சர்மாவின் நடிப்பு மிகையில்லாமல் யதார்த்தமாக அமைந்துள்ளது. ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து, மற்றவர்களின் வாழ்க்கையை எப்படி முடக்கிப் போட முடிகிறது என்பதற்கு இவருடைய கதாபாத்திரம் சரியான உதாரணம். இவருடைய கதாபாத்திரத்திற்கடுத்து அதிகமாக ஈர்ப்பவர் சுகுமாரிதான். ஒரு வயதான விதவை அம்மா. பெற்ற மகனான மோகன் சர்மா வெளியில் செல்லும் போது இவரைப் பார்ப்பது ஒரு சகுனத் தடையாக நினைப்பது இப்படிப்பட்ட படத்தில் சரியான குத்தலை வெளிப்படுத்துகிறது. தன்னுடைய பேத்தி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைசியில் சுகுமாரி எடுக்கும் முடிவு கடைசியில் நெகிழ வைத்து விட்டது. அவருடைய நிஜ வாழ்க்கை கூட இப்படி தீயினால்தான் முடிவுக்கு வந்தது என்பதை நினைக்கும் போது கண்கள் நனைகிறது. ‘உயிர்’ படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடித்த ஷம்விருதா, இளம் விதவையாக நடித்திருக்கிறார். சிறுமியாக இருக்கும் போதே பால்ய விவாகத்தால் வாழ்க்கையை இழந்து தவிப்பவர் பாட்டி சுகுமாரியுடன் மிச்ச வாழ்க்கை அந்த ‘ரெண்டாங்கட்டில்’ வாழ்வதைப் பார்க்கும் போது அந்தக் காலத்து நடைமுறை மீதே நமக்கு எரிச்சல் உண்டாகிறது. அதையெல்லாம் கடந்து, முறியடித்து வந்தாலும் இந்த 2014லும் இன்னும் சில இடங்களில் சாதீய வழக்கங்கள் இருப்பதை என்னவென்று சொல்வது. அந்த ‘நாராயணி’ கதாபாத்திரம்தான் படத்திற்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவ்வப் போது வந்தாலும் எதையும் ‘சாடிச்’ செல்லும் இந்த கதாபாத்திரத்தை பயன்படுத்திய விதம் அருமை. அதில் நடித்துள்ள டாக்டர்.ராதிகாவுக்குத்தான் படத்தில் அதிகமான கைதட்டல் கிடைக்கிறது. மற்றும் மோகன் சர்மாவின் மகனாக நடித்துள்ள நிஷன், நெடுமுடி வேணு, ரேணுகா, பிரியா, பாத்திமா பாபு இவர்களின் நடிப்பு குறிப்பிட வேண்டியவை. ஒய்.ஜி. மகேந்திரன், நளினி கேரக்டர்கள் படத்திற்கு தேவையற்றவை, அதிலும் ஒய்ஜியின் கதாபாத்திரத் தன்மை முகம் சுளிக்க வைக்கிறது. அந்த ‘பாம்’ மேட்டரெல்லாம் ரொம்ப ஓவர். சாதீய வழக்கங்களை சொன்னாலும், கூடவே மூட நம்பிக்கைகளைப் பற்றியும் இலை மறை காய் மறையாக சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் புரட்சிகரமாக முடித்திருப்பதால் ஒரு சாதி சார்ந்த வழக்கத்தை பிரதானப்படுத்தியிருப்பது கூட மறந்து போகிறது. அந்த காலத்திய ஒரு கிராமத்தின், சாதி சார்ந்த நடைமுறை, கலாச்சாரப் பதிவாக படம் அமைந்திருக்கிறது. திரைப்படம்தான் என்றாலும் அன்றே முற்போக்கு சிந்தனையுள்ள ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள்  என்பது முக்கியப் பதிவாகவே நமக்குத் தெரிகிறது. இம்மாதிரியான படங்கள் வணிக ரீதியாகவும் வரவேற்பைப் பெற வேண்டும் என்பதே நமது ஆவல். ‘நம்ம கிராமம்’  மற்ற விவரம்  – இங்கே ‘க்ளிக்’ செய்யவும்… 

Read Previous

‘இது கதிர்வேலன் காதல்’ – ‘டீசர்’ விரைவில்…

Read Next

தெலுங்கு ஹீரோ உதய் கிரண் தற்கொலை…