‘வீரம்’ வெற்றி – ஒரு குடும்பத்தில் வந்த மகிழ்ச்சி…

actor-balaஜித் ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு இயக்குனராக மாறிவிட்டார் ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா.

‘சிறுத்தை’ சிவா என்றழைக்கப்பட்டவர் இனி ‘வீரம்’ சிவா என அழைக்கப்படுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் சொல்லுமளவிற்கு அப்படத்தின் வெற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வெற்றி ஒரு குடும்பத்தில் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வீரம்’ படத்தின் இயக்குனர் சிவாவின் சொந்தத் தம்பி நடிகர் பாலா. இந்த படத்தில் அஜித்தின் தம்பிகளுள் ஒருவராக நடித்திருக்கிறார்.

‘காதல் கிசு கிசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ‘அன்பு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமா அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

அதன் பின் மலையாளப் பக்கம் சென்றவருக்கு, அடுத்டுத்து வெற்றிப் படங்களாக அமைந்து மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடித்தது உட்பட 40 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல, மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘வீரம்’ படம் மூலம் வெற்றிகரமாக ‘ரீ-என்ட்ரி’ ஆகியுள்ளார்.

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாலா, அவர் குடும்பம் பற்றிய ஒரு சென்டிமென்ட்டான நிகழ்வை கண் கலங்கச் சொன்னார்.

“நான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்து அங்கேயே செட்டில் ஆகி விட்டேன். என் அண்ணன் சிவா ஒளிப்பதிவாளராக ஆரம்பித்து, பின்னர் தெலுங்கில் படங்களை இயக்கி ஹைதராபாத்திலேயே செட்டில் ஆகிவிட்டார். எனது அக்கா சீனாவில் செட்டில் ஆகிவிட்டார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நாங்கள் சென்னையில் உள்ள வீட்டில் ஒன்றாக சந்திக்கிறோம். ’வீரம்’  படத்தின் மகிழ்வை விடிய விடிய கொண்டாடி வருகிறோம். அவ்வளவு பேர் போன் செய்து எங்களை மகிழ்வித்து வருகின்றனர். சில நாட்களாக தூங்கவே விடியற்காலை ஆகி விடுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் போது அஜித் சாருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அவருடைய உதவும் குணத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

நான் வெளியில் சொன்னால் என்னைத் திட்டுவார், இருந்தாலும் சொல்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் போது, அவருடன் பணிபுரிகிறவர்களுக்காக மிகவும் வசதியான விதத்தில் சொந்த வீடுகளை அவர்களுக்காக கொடுத்தார்.

அப்போது அவரிடம் நான் அதைப் பற்றி கேட்ட போதுதான், “நம்ம கூட இருக்கிறவங்களை நாம நல்லா வச்சிக்கிட்டால், நமக்கு மேல இருக்கிறவன் நம்மளை நல்லா வச்சிப்பான்னு”, சொன்னாரு. இதை படத்திலும் வைத்திருக்கிறோம். அவருடைய உயர்ந்த குணம் என்னை மிகவும் நெகிழ வைத்தது.

நான் பிறந்து வளர்ந்த இங்கு மீண்டும் நாயகனாக வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன்,” என்றார்.

‘வீரம்’ இயக்குனர் சிவா, பாலா இவர்களின் தாத்தா பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.கே.வேலன். சென்னையில் அருணாச்சலா ஸ்டுடியோவை நிறுவியவர்.

பல திரைப்படங்களில் அங்குள்ள ஆலமரம் நடித்து புகழ் பெற்றுள்ளது.

‘வீரம்’ படத்தின் வெற்றி ஒரு சினிமா பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Read Previous

நமீதாவைப் பார்க்கணுமா…ரத்த தானம் செய்யுங்க…

Read Next

ஹீரோக்களை நம்பி படங்கள் இல்லை – விஷால் பட இயக்குனர்

Most Popular