வைரமுத்து முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து சீனு ராமசாமி இயக்க உள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் பணிபுரிய உள்ளார்.
யுவன் இசையில் பாடல்கள் எழுதுவது தொடர்பாக முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் வைரமுத்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
அதில், இளையராஜா பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இளையராஜாவுடன் மீண்டும் பணிபுரிவது சம்பந்தமான கேள்விக்கு, கெட்டிப்பட்ட மௌனத்தைப் பார்த்து இந்த கேள்வியைக் கேளுங்கள். இந்த கேள்விக்கு நான் இதுவரை சொன்ன பதிலை நீட்டினால் பூமி உருண்டைக்கு அரைஞாண் கயிறு கட்டலாம். அவ்வளவு சொல்லியாகிவிட்டது என்று பதிலளித்துள்ளார்.
மேலும் இளையராஜா இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால் தனது மூத்த இசையோடு இளைய தமிழை இணைத்துக் கொள்ள வேண்டும். மதன் கார்க்கி, கபிலன் போன்றவர்களோடு அவர் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மதன் கார்க்கி, கபிலன் இருவருமே வைரமுத்துவின் மகன்கள். அதே சமயம் மற்ற இளம் பாடலாசிரியர்களை இளைய தமிழ் என குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.
வைரமுத்துவின் இந்த பதிலால் இளையராஜாவின் ரசிகர்களும், மற்ற இளம் பாடலாசிரியர்களும் அவர் மீது கோபமடைந்துள்ளதாகத் தெரிகிறது.