ஆக்ஷன் ஹீரோக்கள் கிடையாது, கிளாமர் ஹீரோயின்கள் கிடையாது, ஆனாலும், அசத்தலான , யதார்த்தமான ஒரு வித்தியாசமான ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். இதுவரை பாடல்களுக்கும், ஒரு சில நகைச்சுவைக் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கோயம்பேடு மார்க்கெட்டை முதன் முறையாக ஒரு முழு படத்துக்கும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். மார்க்கெட்டும், அந்த ஆச்சி மெஸ் கடையும் கூட கதாபாத்திரங்களாகவே நமக்குத் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்கு மட்டும்தான் அடையாளம் தேவைப்படும் என்பதில்லை, நம்முடன் உணர்வு பூர்வமாக இணைந்தவற்றுக்கும் ஒரு அடையாளம் உண்டு. புள்ளி, சித்தப்பா, குட்டிமணி, சேட்டு நான்கு பேரும் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கிப் பிழைக்கும் டீன் ஏஜ் வயது சிறுவர்கள். இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர் ஆச்சி. வெறும் மூட்டை தூக்கி மட்டுமே எப்படிடா பிழைப்பை நடத்துவீங்க என்ற ஆச்சியின் கேள்வியால் வேறு ஏதாவது செய்தும் சம்பாதிக்கலாம் என முடிவெடுக்கிறார்கள். ஆச்சியின் உதவியால், அந்த மார்க்கெட் சங்கத் தலைவரான எம்கேபி-யிடம் கடை ஒன்றை வாங்கி அங்கு ‘ஆச்சி மெஸ்’ என்ற சிறு ஹோட்டலை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், எம்கேபியின் அடியாட்கள் அந்த ஹோட்டலுக்கு வந்து சரக்கு அடிப்பதையும், பெண்களை கூட்டி வருவதையும் பொறுக்காமல் புள்ளி, சித்தப்பா, குட்டிமணி, சேட்டு தட்டிக் கேட்க சண்டை வலுக்கிறது. ஒரு கட்டத்தில் எம்கேபியின் மைத்துனர் மயில்-ஐ அடித்துத் துவைக்கிறார்கள். இதனால் கோபமுற்ற எம்கேபி நான்கு பேரையும் நான்கு திசைக்கு பிரித்து விடுகிறார். பின்னர் ஒன்று சேரும் நண்பர்கள், தாங்கள் வாழ்க்கையைத் துவக்கிய இடமான கோயம்பேடு மார்க்கெட்தான் தங்களின் இடம் என்பதை உணர்ந்து எம்கேபியை எதிர்த்து போராட ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ். ‘பசங்க’ படத்தில் பள்ளிச் சிறுவர்களாக நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் இந்த படத்தில் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் சிறுவர்களாக நடித்திருக்கிறார்கள். ‘பசங்க’ படத்திலேயே சிறப்பாக நடித்து தேசிய விருதை வாங்கிய கிஷேர், ஸ்ரீராம் உட்பட நால்வருமே இந்த படத்திலும் அசத்தியிருக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து ஹீரோவாகவும், நகைச்சுவை நடிகர்களாகவும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பள்ளியில் படிக்கும் சிறுமிகளாக சாந்தினி, சீதா அருமையான அறிமுகம். இருவருமே அவர்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும், சீதாவின் கதாபாத்திரம் அனுதாபப்படவும் வைக்கிறது, சிரிக்கவும் வைக்கிறது. இருந்தாலும் இவர்களை நண்பர்களில் இருவர் காதலிப்பதாக காட்டும் காட்சிகள் ஏற்புடையதாக அமையவில்லை. வெறும் நட்புடனேயே நிறுத்தியிருக்கலாமே…. ஆச்சியாக சுஜாதா, மயிலாக ஆர்.கே. விஜய் முருகன், எம்கேபியாக கிருஷ்ண மோகன் அவரவர் கதாபாத்திரங்களில் மிகவும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ இமான் அண்ணாச்சி முதல் முறையாக சினிமாவில் பெயர் சொல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனி குடித்து விட்டு பேசும் காட்சியில் தியேட்டரில் அதிக கைதட்டல். ம்ம்ம்…அவ்வளவு பேரு பாதிக்கப்பட்டிருப்பாங்க போல. இந்த ரூட்டைப் பிடிச்சி அப்படியே மேல வந்துடுங்க அண்ணாச்சி… விஜய் மில்டனின் இயக்கமும், ஒளிப்பதிவும் உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடியாக மிளிர்கிறது. எந்த இடத்திலும் சினிமாத்தனம் அதிகமில்லாமல் காட்டுவதற்கு நல்ல முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பிரிந்த நண்பர்களை ஒரே பாட்டில் மீண்டும் ஒன்று சேர்ப்பது மட்டும் விக்ரமன் பட ஸ்டைல். இயக்குனர் பாண்டிராஜ் எழுதியுள்ள வசனம் படத்திற்கு சரியான பக்கபலம். பல காட்சிகளில் வசனத்திற்கு கைதட்டல் கிடைக்கிறது. அருணகிரி பாடல்களுக்கான இசையையும், சீலின் பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். இரண்டுமே படத்தோடு ஒன்ற வைக்கின்றன. தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் மனதைக் கவரும் படங்கள் வருகின்றன. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தங்களுக்குள் இருக்கும் சினிமா மீதான காதலையும், நல்ல படத்தை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஒரு சிலரே கொண்டிருக்கிறார்கள். அவர்களில் விஜய் மில்டனும் நிச்சயம் இடம் பிடிப்பார். இந்த ‘கோலி சோடா’ அவருக்குள் இருக்கும் திறமையை உடைத்துக் கொண்டு வெளிவர வைத்து நல்ல ‘இயக்குனர்’ என்ற அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது. ‘டாஸ்மாக்’ காட்சிகளில் தரமிழந்து நிற்கும் தமிழ் சினிமாவை இந்த ‘கோலி சோடா’வை அதிகமாகவே ஊற்றி சரிக்கட்டி விடலாம். 2014ம் ஆண்டில் வெளிவந்துள்ள முதல் தரமான படம்…வெல்டன் விஜய் மில்டன்…